தமிழாசிரியர் – AVM சரவணன்
ஒரு நாள் என் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியவர் திரு. வி.அருணாசல ஐயர் என்பதை அறிந்தபோது
மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது.
நான் மயிலை பி.எஸ்.உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது எனக்குத் தமிழ் ஆசிரியராக இருந்தவர் அவர். நீண்ட
இடைவெளிக்குப் பின் அவர் எனக்குக் கடிதம் எழுதியதில் சந்தோஷம் ஏற்பட்டாலும், எழுதியதன் காரணம் என்ன என்று கொஞ்சம் யோசனையும் இருந்தது.
தனக்கு உடல்நிலை சரியாக இல்லை என்றும், ராயப்பேட்டை மருத்துவமனையில் இருப்பதாகவும் சொல்லி என்னைப் பார்க்க விருப்பமும் தெரிவித்திருந்தார். கடிதத்தில் தெளிவாக அவர் குறிப்பிடாவிட்டாலும்கூட, அவர் ஏதோ கஷ்ட நிலையில் இருப்பதாக எனக்குத் தோன்றியது. கடிதத்தில் அதை பற்றி விவரமாக எழுத விரும்பாமலோ
அல்லது முடியாமலோ இருக்கிறார் என்றும் ஊகித்தேன்.
என்னால் உடனே சென்று அவரைப் பார்க்க முடியாத நிலை. நான் நேரில் சென்று பார்ப்பதைத் தள்ளிப்போட்டாலும் அவருக்குத் தேவையானதை முதலில் அனுப்பிவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். அதனால் எங்கள் விளம்பர இலாகாவில் பணிபுரியும் திரு எஸ்.பி.அர்ஜுனனையும், எனது உதவியாளர் திரு.மலையப்பனையும் மருத்துவமனைக்கு
உடனே அனுப்பி என்னால் முடிந்த ஒரு தொகையை ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு வரச் சொன்னேன். விரைவில் அவரை நேரில் வந்து சந்திப்பதாகத் தெரிவிக்கச் சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, அருணாச்சல ஐயர் அவர்களின் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்தேன்.
சில நாட்கள் கழித்து மறுபடி எனக்கு ஒரு கடிதம் வந்தது. ஆசிரியர்தான் எழுதியிருந்தார். ‘உன்னை நேரில் சந்திக்க விரும்பினேன். உதவி கேட்க வேண்டும் என்று தோன்றினதால்தான் அப்படி எழுதினேன். ஆனால் நேரில்
சந்தித்திருந்தால் உதவி கேட்டிருப்பேனா என்பது சந்தேகம்தான். என் சங்கடத்தைப் புரிந்துகொண்டு நீயாகவே
பணம் அனுப்பியது ரொம்ப உதவியாக இருந்தது. என் தேவையை ஊகித்து நீ காலத்தில் செய்த உதவியை நான்
எப்போதும் மறக்க மாட்டேன்’ என்று எழுதியிருந்தார்.
இந்த விதத்திலாவது அவருக்கு உதவ முடிந்ததே என்று எனக்குள் ஒரு நிறைவு தோன்றியது.
பிறகு ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை. அலுவலகத்தில் நண்பர்களுடன் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது என்னைப் பார்க்க யாரோ வந்திருப்பதாக அலுவலக உதவியாளர் வந்து தெரிவித்தார்.
‘உங்கள் ஆசிரியர் என்று சொல்கிறார். தலையில் குடுமி வைத்திருக்கிறார். உங்களைப் பார்க்க வேண்டும் என்கிறார்’
என்று உதவியாளர் சொன்னதுமே, வந்திருப்பவர் அருணாசல ஐயர் அவர்கள்தான் என்பது புரிந்துபோயிற்று.
என்னோடு கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த நண்பர்கள் பண்பறிந்து அடுத்த அறைக்குள்ளே போனார்கள்.
ஆசிரியரும் அவரது மனைவியும் உள்ளே வந்தார்கள். உடன் உதவிக்கு ஒரு பையனை அழைத்துவந்திருந்தார்கள்.
ஒரு தட்டு நிறைய பழங்கள் வைத்து அதில் நான் கொடுத்த பணத்தைக் கவரில் வைத்திருந்தார்.
‘நான் இன்னும் அதிக நாட்கள் உயிரோடு இருக்க மாட்டேன் என்பது எனக்குத் தெரியும். என் உடம்புக்கு ஒன்றுமில்லை என்று இவர்கள் எல்லாரும் சொன்னாலும், எனக்குத் தெரியும் என் உடம்பு பற்றி. இறக்கும்போது ஒரு கடன்காரனாக
இறக்க நான் விரும்பவில்லை. அதனால்தான் இந்தப் பணத்தைத் திருப்பித் தருகிறேன். கால நேரம் அறிந்து நீ
கொடுத்ததற்காக நன்றி. இதை நீ திரும்பப் பெற்றுக்கொண்டால்தான் எனக்குத் திருப்தியாக இருக்கும்’ என்றார்.
நான் உணர்ச்சி வசப்பட்டுப் போனேன். அவரது உயர்ந்த எண்ணம் என்னை நெகிழவைத்தது.
அவருக்கும் அவரது துணைவியாருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு அவர்களது ஆசீர்வாதங்களைப் பெற்றேன்.
பிறகு அந்தப் பணத்தை அவரிடமே கொடுத்துவிட்டு ‘அன்று பள்ளிக்கூடத்தில் உங்களிடம் படிக்கும்போது அப்பச்சி
கொடுத்த பணத்தைத்தான் உங்களிடம் சம்பளமாகக் கொடுத்தேன். ஆனால் இன்று நானே நன்றாக சம்பாதிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். உங்களுக்கு இதைக் கொடுக்கும் அளவுக்கு என்னை சம்பாதிக்க வைத்திருக்கிறார்
என் தந்தை. அதனால் இந்தப் பணத்தை நீங்கள் குரு தட்சணையாக ஏற்க வேண்டும். இதை ஏற்றால்தான் எனக்கு
ஒரு நிறைவு ஏற்படும்’ என்று சொன்னேன்.
அவரும் மிகுந்த நெகிழ்ச்சியுடன் என்னை அணைத்துக்கொண்டார். சந்தோஷத்தோடு பணத்தை ஏற்றுக்கொண்டார்.
‘நீ இப்படி சொல்வது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நீ சொன்ன மாதிரி குரு தட்சணையாக இதை ஏற்கிறேன்.கடனாக நினைக்கவில்லை. உன் வார்த்தைகள் ஆறுதலாக இருக்கின்றன’ என்று சொல்லி விடை பெற்றார்.
அவர் அஞ்சிய மாதிரி சிறிது காலத்தில் மறைந்துவிட்டார். ஆனால், அவரும் அவரது வார்த்தைகளும் என் மனதில் என்றும் மறையாமல் பதிந்துவிட்டது.
கல்வியும் ஒழுக்கமும் போதிக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலும் பரந்த மனமுடையவர்கள். பொறாமை என்பது
சிறிதும் இல்லாதவர்கள். எத்தனை பெரிய பதவிக்குத் தன் மாணவன் உயர்ந்தாலும், அந்த வளர்ச்சியில்
ஆசிரியர்கள் மகிழ்ச்சிதான் அடைவார்கள்.
– AVM சரவணன்
Super, touched by this true life story Ramesh
Sure Bala.’Endaro Mahanubavulu’.
Filled with life principles.. inspirational &motivating..