ஆதியுமாய் அந்தமுமாய் -ஸ்ரீரங்கம் ரமேஷ்
ப்ரம்மா
ஆதியுமாய் அந்தமுமாய்
மேவி நிற்கும் சக்தியே
அநாதியென்று காலம்வென்று
வீசும் பெருஞ்சோதியே
பாதிமூடியக்கண்கள் பாதி
பேரொளிப்படர்க் கடல்
மூடுமந்திரம் உரைக்கும்
மௌன மொழியின் ஓசையே
விஷ்ணு
யாதுமாகி ஏழுலகும்
உயிர் விதைத்த விந்தையாய்
கடாவி நின்று காத்து வளர்
வாழ்வளிக்கும் வாஞ்சனை
மேலும் கீழும் திசைவிரித்து
இடம் வலம் வளர்விசை
ஓயாமல் முன்னும் பின்னும் நின்று
படைத்தவற்றை காத்தனை
மஹேஸ்வரா
தொடாமல் தொட்டுளம் புகுந்து
மனம் கவர்ந்த சிந்தையே
விடாமல் வந்தனைத்துடன்
கொண்டுசெல்லும் செம்மையே
இல்லாதவர்க்கும் உள்ள
தீராத பெருஞ்செல்வமே
நல்லாசி தரக்கோரி நிந்தன்
பாதம் தொட்டு வேண்டுவோம்.
-ஸ்ரீரங்கம் ரமேஷ்
Creator Preserver and Destroyer