ஆராவமுதே ஓடி அமுதுண்ண வா!
தேனும் பாலும் கற்கண்டும் தெவிட்டா இன்னமுதும்
இன்னும் தோய்ந்த தயிரும் கொழிக்கும் வெண்ணெயும்
கன்னல் சுவையில் திரட்டிய தீஞ்சுவைப் பாலும்
அண்ணல் உனக்கு அர்ப்பணிக்கின்றேன் தின்ன நீ ஓடிவா!
உப்பிட்ட சீடையும் உவந்த இனிப்பிட்ட பண்டமும்
அப்பமும் அக்கார வடிசிலும் சிறிய தேன் பந்து சீயமும்
ஒப்பற்ற அதிரசமும் ஒய்யாரச் சிற்றுண்டையும் உண்டு
அப்பனே அழகனே தப்பாமல் நீ வந்து அமுதுண்ண வா!
தேன் குழலும் மெய் மறக்கும் நெய் மணக்கும் மனோகரமும்
மென் முறுக்கும் வாழ்வை விளக்கும் முள் முறுக்கும்
என் விருப்பில் நான் செய்வித்த பொன் கடலை உருண்டையும்
புன் முறுவலுடன் தண் மலர் பாதம் பதித்து நீ உண்ண வா!
ஆவலுடன் குசேலன் மடியிலிருந்து நீ எடுத்துண்ட அவலும்
நாவல் பழமும் நாட்டுச் சர்க்கரையும் நல் வாழைப்பழமும் உள
பாவம் ஒன்றுமறியாப் பாலகர் சூழ்ந்தென்றும விளையாடிய
கோவலனே! கோகுலக் குலக் கொழுந்தே! விரைந்தோடி உண்ண வா!
மெய் அன்புடன் மேனியுடன் அக அழுக்கையும் கழுவி
நெய் விளக்கேற்றி நல் தூபம் எழுப்பி நல் மலர் தூவி
செய் வினைகள் தீர்க்கும் நின் கமல மலர்ப்பாதம் நினைந்து
கை தொழுது நிற்கின்றோம், ஆராவமுதே ஓடி அமுதுண்ண வா!
-ரங்கராஜன் காழியூர் மன்னார் –