இந்தியில் Ka, kha, ha, ga என நான்கு “க” உண்டு. ஆனால் தமிழில் “க” என ஒரேயொரு எழுத்து மட்டுமே உண்டு. தமிழில் ஒரேயொரு “க” மட்டுமல்ல ஒரேயொரு ‘ச’ ‘த’ ‘ப’ மட்டுமே உண்டு. ஆனால் இந்தியில் இவை ஒவ்வொன்றுக்கும் நான்கு எழுத்துகள் உள்ளன.
ஆக, செம்மொழியான தமிழில் உள்ள ஓர் எழுத்துக்கு இந்தியில் நான்கு எழுத்துக்கள் உள்ளன. இது தமிழின் குறைபாடுதானே என்பார்கள். இதைத்தான் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜும் சில வருடங்களுக்கு முன்பு கேலி செய்து பதிவிட்டிருந்தார். அவரது பதிவு இப்போதுதான் என் கண்ணில்பட்டது. முன்னாள் நீதிபதிக்கும், இந்தியில் உள்ள எழுத்து வளம் தமிழில் இல்லை என வாதிடுவோருக்கும் எனது பதில் இதுதான்.
இந்தியில் நான்கு எழுத்து இருப்பதும் ஒன்றுதான், தமிழில் ஓர் எழுத்து இருப்பதும் ஒன்றுதான். எப்படி?
முதலில் ‘க’ வை எடுத்துக் கொள்வோம்.
மகன் – இதில் வரும் ‘க’ வை நீங்கள் அழுத்தி உச்சரிக்க இயலாது. மென்மையாகத்தான் உச்சரிக்க வேண்டும்.
மக்கள் – இதில் இரண்டாவதாக வரும் ‘க’ வை நீங்கள் மென்மையாக உச்சரிக்க இயலாது. அழுத்தமாகத்தான் உச்சரிக்க வேண்டும். ஆக ‘க’ என்பது ஓரேயொரு எழுத்துதான். அதற்கு தனியாக க்+அ=க என ஒலிக்குறிப்பும் உண்டு. ஆனால் அந்த ‘க’ மென்மையாக உச்சரிக்கப்பட வேண்டுமா அல்லது அழுத்தமாக உச்சரிக்கப்பட வேண்டுமா என்பதை முந்தையை எழுத்து தீர்மானிக்கும்.
ஓர் எழுத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அதற்கு முந்தைய எழுத்து தீர்மானிப்பது தமிழைத் தவிர வேறெந்த மொழியிலும் இல்லை. உதாரணமாக,
சங்கு, சுக்கு – இவ்விரு வார்த்தைகளின் கடைசியில் வரும் ‘கு’ க குடும்பத்தை சேர்ந்தது. ‘கு’ எப்படி உச்சரிக்கப்பட வேண்டும் என்பதை ‘கு’ வின் முந்தைய எழுத்து தீர்மானிக்கும். ‘சங்கு’, ‘சுக்கு’ ஆகிய வார்த்தைகளை வாய்விட்டு உச்சரித்துப் பாருங்கள் வித்தியாசம் புரியும். இதுபோல ஏராளமான சொற்கள் தமிழ் மொழியில் புதைந்துள்ளன.
மகன்-மக்கள்
காகம்-வெட்கம்
ரதம் – ரத்தம்
பாசம் – மச்சம்
பண்பு-வனப்பு
இந்தியில நான்கு எழுத்துகள் தனித்தனியாக செய்யும் வேலையை, தமிழின் ஒரேயொரு எழுத்து இடத்துக்கு தகுந்தாற்போல திறம்பட செய்து முடிக்கும்.
பாரதியாருக்கு தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் அத்துப்படி. இவற்றைத் தவிர பாரதிக்குப் பேசத்தெரிந்த, பிறர் பேசினால் புரிந்து கொள்ளத் தெரிந்த மொழிகள் 4 இருந்தன. அந்த மொழிகள் லத்தீன், கிரேக்கம், கன்னடம், மராத்தி. அப்பேர்ப்பட்ட பன்மொழி வித்தகர் பாரதி ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’ என ஆனந்தக் கூத்தாடுகிறார்.