உணவில் ஒரு பாடம் !
ஒரு சமயம் சப்பாத்தியை சுடச் சுடத் தயாரித்து சிவாஜிக்கு பரிமாறிக் கொண்டிருந்தார் அன்னை ஜீஜாபாய்.
ஆனால் உணவில் கவனம் செலுத்தாமல் ஆழ்ந்த யோசனையில் இருந்தார் சத்ரபதி. பரந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டு பெரும் வலிமையுடன் இருக்கும் ஔரங்கசீப்பை வெல்வது எப்படி என்ற யோசனையில் தீவிரமாக ஆழ்ந்திருந்த அவருக்கு உண்வின் மீது எப்படிக் கவனம் இருக்கும். சூடாக இருந்த சப்பாத்தியின் நடுவில் கையை வைத்தார். அதிகமான சூட்டால் ஆ என்று அலறினார்.
அன்னை அவரை நோக்கினார்:”மகனே! அப்படி சாப்பிடக் கூடாது. சப்பாத்தியின் ஓரத்தை முதலில் கிள்ளிச் சாப்பிடு. அங்கு சூடு இருக்காது. அது ஆறி இருக்கும். பின்னர் மெதுவாக நடுப்பகுதியை எடு” என்றார்.
சிவாஜி உட்னே துள்ளிக் குதித்தார். அவருக்கு ஔரங்கசீப்பை வெல்லும் உபாயத்தை அன்னை கற்பித்து விட்டார் ஒரு நொடியில்!
வலுவான மையத்தோடு பரந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்த ஔரங்கசீப்பை நேரில் தாக்காமல் முதலில் சுற்றிவர இருக்கும் கோட்டைகளைக் கைப்பற்றி அவரை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதை சப்பாத்தி அவருக்கு கற்பித்து விட்டது. சூடான மையப் பகுதி சுற்றி வர இருப்பதைக் கிள்ளிச் சாப்பிடும் போது ஆறி விடும், இல்லையா!