கிருஷ்ண நாமத்தால் சோறு கிடைக்குமா?

கிருஷ்ண நாமத்தால் சோறு கிடைக்குமா?
0Shares
கிருஷ்ண நாமத்தால் சோறு கிடைக்குமா?
ஒரு கிராமத்தில் வேலையில்லாத இளைஞன் ஒருவன் ஊர்சுற்றித் திரிந்தான். அங்குள்ள குளக்கரையில் இருந்த கிருஷ்ணன் கோயிலில், திருவிழா விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் கூடி ஒருநாள் முழுக்க கிருஷ்ண நாமத்தை ஜபம் செய்தார்கள். வேலையில்லாத இளைஞனுக்கு அந்த நாமத்தைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
“கிருஷ்ணா’ என்ற இந்த வார்த்தையில் என்னதான் இருக்கிறது என்று அவன் சிந்தித்தான். விடை தெரியவில்லை. அங்கிருந்த பெரியவரிடம்,
“கிருஷ்ணா! கிருஷ்ணா!”என்று கூச்சல் போடுகிறீர்களே! அதனால் என்ன கிடைத்து விடும்? எனக்கு பசிக்கிறது? உங்களுடைய கிருஷ்ணனால் எனக்கு சோறு போட முடியுமா?” என்று கத்தினான்.
பெரியவர் அந்த இளைஞனிடம், “கிருஷ்ண நாமத்தைச் சொன்னால் சோறு மட்டுமல்ல, நீ எதை வேண்டுகிறாயோ அது கிடைக்கும்,” என்றார்.
இளைஞனுக்கு கிருஷ்ண மந்திரத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லை என்றாலும், அந்தப் பெரியவர் சொல்கிறாரே என்பதற்காக கிருஷ்ண நாமத்தைச் சொல்ல முடிவெடுத்தான். ஊருக்கு அடுத்தாற் போல் இருந்த காட்டுப் பகுதிக்குச் சென்று தனியாக அமர்ந்தான். அவன் வாயில் “கிருஷ்ணா’ என்பதைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை. திடீரென்று அந்தப் பக்கம் யாரோ வருவது போல சப்தம் கேட்டதும், ஒரு மரத்தின் மீது ஒளிந்து கொண்டான் இளைஞன்.
ஒரு வழிப்போக்கன் அந்த மர நிழலில் அமர்ந்து, அவன் கொண்டு வந்த கட்டுச் சோற்றை சாப்பிட்டான். அசதியில் அங்கேயே தூங்கி விட்டான்.
இளைஞனோ கண்ணை மூடியபடி மரத்தில் அமர்ந்தே கிருஷ்ண நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் கண் விழித்துப் பார்த்தவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. இன்னொரு கட்டு சாதத்தை மரநிழலில் மறந்து வைத்து விட்டு வழிப்போக்கன் சென்று விட்டான்.
கிருஷ்ணநாம மகிமையால் தான் இந்த சாதம் தனக்கு கிடைத்தது என்று எண்ணி வேகமாக மரத்தை விட்டு கீழே இறங்கினான்.
ஆனால், வந்த வேகத்தில் அவன் அப்படியே நின்றுவிட்டான். எவனோ, வழிப்போக்கன் மறந்து விட்டுப் போன சோற்றைச் சாப்பிடுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. உண்மையில்
கிருஷ்ண நாமத்திற்கு மகிமை இருக்குமானால், இந்தச்
சாப்பாட்டை சாப்பிடும்படி நிர்ப்பந்தம் ஏற்படும் வரை
பட்டினியாகவே இருப்பது என்று முடிவெடுத்தான்.
திரும்பவும் மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். சூரியன் மறையும் வேளை வந்தது. அப்போது காட்டுப் பாதையில் சில கள்வர்கள் தாங்கள் திருடிய பொருள்களுடன் வந்து மரநிழலில் அமர்ந்து பங்கிட்டுக் கொண்டிருந்தனர். கள்வர் தலைவன், ஜபம் செய்து கொண்டிருந்த இளைஞனைக் கண்டான்.
தங்களை வேவு பார்க்க வந்திருப்பவன் என்று ஆத்திரம் கொண்டு, இளைஞனை அந்த மரத்திலேயே கட்டி வைத்தான்.
அதற்குள் பசியில் இருந்த திருடன் ஒருவன், மரத்தடியில் இருந்த சாப்பாட்டைப் பார்த்து மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான். ஆனால், கள்வர் தலைவன்,
“இந்தச் சோற்றை நாம் சாப்பிடுவது கூடாது. நம்மைக் கொல்லும் நோக்கத்தில் விஷம் கலந்து இவன் தான் வைத்திருப்பான். அந்தச் சோற்றை அவனுக்கே கொடுப்போம்!” என்று சொல்லி இளைஞனை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினான். இளைஞனும் அதை வயிறு நிறைய சாப்பிட்டான்.
இளைஞன் சாப்பிட்ட பிறகும் அவன் சாகாததைக் கண்ட திருடர்கள், உணவில் விஷம் இல்லை என்பதை அறிந்தனர். இளைஞனால் தங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
கள்வர் தலைவன் இளைஞனைக் கட்டிலிருந்து அவிழ்த்து விட்டதோடு இல்லாமல் தன்னிடம் இருந்த பணத்தில் கொஞ்சம் கொடுத்தான்.
“நம்பிக்கையில்லாமல் கிருஷ்ண நாமம் சொன்னதற்கே இவ்வளவு பலன் கிடைத்ததே’ என்று எண்ணியவன், அழியாத செல்வம் கிருஷ்ண நாமம்தான் என்ற முடிவுக்கு வந்தான்.
காட்டிலிருந்து ஊரில் இருக்கும் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்து, திருடன் தந்தப் பணத்தை உண்டியலில் போட்டான். “இனி ஊர் சுற்றமாட்டேன். உண்மையாக பக்தி கொண்டு உழைத்து வாழ்வேன்,” என்று கிருஷ்ணனிட்டம் சத்தியம் செய்தான். உழைப்பால், பெரும் பணக்காரனும் ஆனான்
ஆகவே பகவானின் பெயரில் நம்பிக்கை வையுங்கள்! நாளும் சொல்லிப் பயனடையுங்கள்!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *