பூணூல் இந்துக்கள் அனைவரும் அணிய இயலுமா?

பூணூல் இந்துக்கள் அனைவரும் அணிய இயலுமா?
0Shares
பூணூல் இந்துக்கள் அனைவரும் அணிய இயலுமா?
கேள்வி : பூணூல் பிராமண அடையாளமா? பூணூல் இந்துக்கள் அனைவரும் அணிய இயலுமா?
பதில் : குடுமி வைப்பது இன்று எப்படி பிராமணர்களின் தனித்த அடையாளம் என்று கூறப்படுவதுபோல பூணூலும் பிராமணர்களின் தனி அடையாளம்
ஆகிவிட்டது. அதற்காக பிராமணர்களுக்கு மட்டும்தான் அந்த உரிமை உண்டு என்று கூறுபுவர்கள் இருப்பார்களேயானால் அவர்களை விட‌ மூடர்கள் எவருமிலர். பூணூலின் முக்கியத்துவமானது காயத்ரி மந்திரத்தில் அடங்கியுள்ளது. காயத்ரி மந்திரத்தினைக் கண்டுபிடித்தவர் விஸ்வாமித்ர மகரிஷியாவார். க்ஷத்ரியனாகப் பிறந்த விஸ்வாமித்திரர் உபதேசித்த மந்திரம்தான் காயத்ரி மந்திரம்.
இந்த பிராமணரல்லாத சத்ரிய மகரிஷி கண்டுபிடித்த மந்திரம்தான் பூநூல் அணியும்போது முக்கியத்துவம் பெறுகிறது. வரலாற்றின் அடிப்படையில் தமிழ் குடிகள் அனைவரும் பூணூல் அணிந்தவர்கள்தான். குறிப்பாக நாடார்களும் பூணூல் அணிந்துள்ளனர். பறையர், பள்ளர்களும் பூணூல் அணிந்திருந்தனர் என்பதை,
“முந்திப் பிறந்தவன் நான் முதல் பூணூல் தரித்தவன் நான் சங்குப் பறையன் நான் சாதியில் மூத்தவன் நான்”
என்ற பழம்பாடலின் மூலம் அறியலாம். இன்னும் ஒருபடி மேலாக ஒரு சிற்பத்தை செதுக்கும் சிற்பியானவனும் பூணூல் அணிந்திருக்க வேண்டும் என்கிறது சிற்ப சாஸ்திரம். அதாவது,
“ஸ்தபதீநாம் சதுர்வேத தஸ; கர்மா விதியதே| ஸிகாயஜ் ஞோபவீ தஞ்ச ஜபமாலா கமண்டலும் || கூர்மபீட: ஸிரச்சக்கரம் யோக வேஷ்டிர லங்கர் தம்| பீதவஸ்த்ரஸித ப்ரஷ்டம் விபூதிர்க் கந்தலேபநம் || ஸிவிவமந்த்ரம் ஸிவத்யாநம் ஸிவபூஜா விதீயதே | ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸாநாம் ஹ்ருத யேத்யாந ஸில்பிநாம்.”
– சிற்ப சாஸ்திரம்.
அதாவது எவனொருவன் நான்கு வேதங்களையும் அறிந்தவனாயும் ; மரம், செங்கல், கருங்கல், உலோகம், சாந்து , மண், சுக்கான்கல், தந்தம் முதலியனவற்றில் உருவங்களை அமைக்கும் ஆற்றல் வாய்ந்தவானாயும் ; இயந்திரம், படம் முதலியன எழுதும் திறமை வாய்ந்தவனாயும் ; தலையிற் சிகையை உடையவனாயும் ; பூணூலைத் தரித்தவனாயும் ; பீதாம்பரம் அணிந்தவனயும் ; விபூதியையும் வாசனைச் சந்தனத்தையும் அணிந்தவனாயும் மிருத்தலோடு, சிவபூசை செய்பவனாய், பிரம்மா விஷ்ணு மகேசுரரை இருதயத்தில் தியானிப்பவனாய் இருக்கின்றானோ அவனே சிற்பியாவான் என்பது இதன் பொருளாகும்……!
ஞான சம்பந்தர் என்ற ஆகம விற்பன்னர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய 727 குறட்பாக்கள் அடங்கிய ஆகமக் கருத்துகளுக்கு ஆறுமுகநாவலர் உரை எழுதியுள்ளார். சைவ சமய நெறி என்ற பெயருடைய இந்நூலில் பாடல் எண் 49 லிருந்து 53 ஆவது படற்பகுதிகள் நால்வர்ணத்தவரும் அணிய வேண்டிய பூணூலின் வகைகளை தெளிவுபடுத்துகிறது. அதோடு சிவன், முருகன் போன்ற முன்னணி தெய்வங்கள் பூணூல் அணிந்திருந்த செய்தியை தமிழ் இலக்கியங்கள் அழகாக எடுத்துரைக்கின்றன..!
“கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்; மார்பினஃதே மை இல் நுண் ஞாண்; நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு, கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்”
– அகநானூறு
பொருள் : கார் காலத்தில் பூக்கும் கொன்றைப் பூவைத் தார், மாலை, கண்ணி என்னும் தொடைகளாக்கி அணிந்துகொண்டுள்ளவன் இவன். இவனது மார்பில் பூணூல் உள்ளது. இமைக்காத கண் ஒன்று இவன் நெற்றியில் உள்ளது. என்று சிவபெருமானுக்கே பூநூல் உள்ளது என்பதைப் பாடுகிறார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
“பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கிய
புண்ணியனே மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனேதென்பால் வையமெலாந் திகழுந்திரு வான்மிதன்னில்
அன்பா வுன்னையல்லா லடையாதென தாதரவே”
– திருஞானசம்பந்தர் தேவாரம்.
பொருள் : பொன்போல் ஒளிரும் சடைமேல் கங்கையைத் தாங்கிய புண்ணியமூர்த்தியே! மின்போல் ஒளிரும் முப்புரிநூல் அணிந்து, இடப வாகனத்திலேறி, வேதங்களை அருளிச்
செய்தவனாய், வேதப் பொருளாகவும் விளங்குபவனே! உலகெலாம்
இன்புறத் திருவான்மியூர் என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும்
அன்புருவான உன்னையல்லால் என் மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது…!
இது மட்டுமில்லாமல் முருகன், திருமால், புத்தர், ஐயனார், அவ்வளவு ஏன் இலங்கை வேந்தன் இராவணனுக்கே பூணூல் உண்டு என்கிறார் அப்பர் பெருமான் அழகாக எடுத்துரைக்கிறார்.
“மாலினா ணங்கையஞ்ச மதிலிலங் கைக்குமன்னன் வேலினான் வெகுண்டெடுக்கக் காண்டலும் வேத நாவன் நூலினா னோக்கிநக்கு நொடிப்பதோ ரளவில்வீழக் காலினா லூன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே”
பொருள் : பெருமையுடைய உமா தேவியார் அஞ்சுமாறு, முப்புரிநூல் அணிந்த திரு மார்பினரும், வேதம் ஓதும் திரு நாவினை உடையவருமான இராவணன், கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, ஈசன் ஒரு நொடிப்பொழுதில் அவ்வரக்கன் அஞ்சுமாறு திருப்பாத விரலால் அமுக்கியவர். அந்த ஈசன் உறையும் இடமே கழிப்பாலை என்னும் திருத்தலம்.
இவ்வாறு பூநூல் என்பது இந்துக்கள் அனைவரும் அணியலாம் என்பதையும், நாம் வழிபடும் இறை திருவுருவங்களுக்கே பூநூல் அணிவித்தே நாம் வழிபடுகிறோம் என்பதையும் மேற்கண்ட உதாரணங்கள் மூலமாக தெளிவாக அறியலாம். சிலப்பதிகாரம், பரிபாடல் மற்றும் தொல்காப்பியம் போன்ற பழமையான நூல்களிலும் பூணூல் பற்றிய குறிப்புகள் உண்டு. எங்குமே பிராமணர்கள் மட்டும்தான் பூணூல் அணிய வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. ஆகவே பூணூல் பிராமண அடையளமன்று. பூணூல் இந்துக்கள் அனைவருக்கும் பொதுவானது. யார் விரும்பினாலும் பூணூல் அணிந்துகொள்ளலாம்…!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *