சுஜாதாவின் ‘காதலர் தின’ சிந்தனைகள்
இந்த வாரம் காதலர் தினம் வருகிறது என்று சொன்னார்கள். சுமார் ஐந்நூறுக்கும் குறைவில்லாத மோசமான கவிதைகள் தமிழிலேயே எழுதப்படும். வாலண்டைன் அட்டைகளில் இதயங்களின் மேல் அம்புகள் தைக்கும். எல்லையற்ற நேரவிரயம் காத்திருத்தல்களிலும், மூத்தவர் மறுப்பிலும் நிகழும். ஓரிரு தற்கொலைகள் நடைபெறலாம்.
காதல் தேவையற்ற ஒரு எமோஷன் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கைகளுள் ஒன்று. என் வாழ்நாளில் நான் பார்த்த காதல்கள் எல்லாம் சந்தேக கேஸ். அவை நிஜமாகவே காதல்தானா, இல்லை இன்ஃபாச்சுவேஷனா என்பதே தெளிவில்லை (ஒரே ஒரு உதாரணத்தைத் தவிர. அது பற்றி இறுதியில்).
சிறுவயதில் காதல் எங்களுக்கு ஏறக்குறைய கெட்ட வார்த்தையாகத்தான் இருந்தது. அந்தக் காலத்தில் அரு.ராமநாதனின் ‘காதல்’ பத்திரிகையில் சீனிவாசனின் கதை வந்தபோது எல்லோரும் அவனை ஒரு மாதிரி நாய் கொண்டுவந்த வஸ்துவைப் போலப் பார்த்தோம். பள்ளிக்கூடத்தில் ஏதேனும் மாணவன் பெண்களிடம் காதல் செய்தான் என்று தெரிந்தால் பிரேயர் மீட்டிங்கின்போது அவனை ஒரு மேஜை மேல் நிற்கவைத்து பிரம்பால் அடிப்பார்கள். இவ்வகையிலான அபாயகரமான சூழ்நிலையில் காதல் பற்றிப் பேசுவதற்கு அசட்டு தைரியம் தேவைப்பட்டது.
ஜனோபகார சாசுவத நிதியின் கேஷியர் பெண்ணுக்கு கோபாலன் ஒரு காதல் கடிதம் எழுதி அதை எங்கள் ‘நாம் ஐவர்’ சர்க்குலேஷன் லைப்ரரி புத்தகத்தில் வைத்து என்னிடம் கொடுத்துவிட்ட கதையை (ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பில்) எழுதியிருக்கிறேன். சம்பந்தப்பட்ட தகப்பனார் அதைக் கண்டுபிடித்து “இனிமே மாதிரி கடுதாசி எழுதினா முட்டியைப் பேத்துருவேன்” என்று அதட்டியதும் “சரி மாமா” என்று அக்காதல் அக்கணமே கைவிடப்பட்டு கோபாலன் தெருவில் சடுகுடு ஆடுவதற்கு சென்றுவிட்டான்.
ஓவர்சியர் பெண் மாலா காதல் செய்து ஒரு நாள் ஓடிப்போய்விட்டதாக வந்த செய்தி கீழச்சித்திரை வீதி முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இத்தனைக்கும் அந்தப் பையனைப் பார்த்தால் சாதுவாக அவள் தம்பி போல இருப்பான். “வீதியில் இத்தனை பேர் இருக்கச்சே போயும் போயும் இந்தக் கறிவேப்பிலைக் கொத்தை பிடிச்சு இவன்கூட ஓடிப்போனா பாருடா … அதாண்டா எனக்கு ஆத்து ஆத்து போறது” என்று ரங்கு ஆதங்கப்பட்டான்.
“காதலுக்கு கண் இல்லைங்கறது இதாண்டா.”
அந்தப் பெண் ஓடிப்போனதும்தான் அவளை பற்றி தீவிரமாக யோசிக்கத் துவங்கினோம். இவளா என்று ஆச்சரியப்படும்படி சாதாரணத் தோற்றம் கொண்ட பெண். மாநிறமாக இருப்பாள். ஒல்லியான கைகளுக்கு பஃப் வைத்து ரவிக்கை. டி.எஸ்.ஆர்.சந்தனாதித் தைலம், குட்டிக்யுரா வாசனையுடன் தன் தோழிகளுடன் பேசிக்கொண்டே தண்ணீர் பிடிக்க வருவாள். நாலைந்து பெண்களுடன் சாயங்கால வேளைகளில் சைக்கிளில் குரங்கு பெடல் பழகுவாள்.
அந்தப் பையன் சம்பத் தூரத்து உறவு போலும். திருவானைக்காவலிலிருந்து வாராவாரம் வருவான். வீட்டுக்கு ஒத்தாசை செய்வான். ஒட்டடை அடிப்பான். எலி பிடிப்பான். ரங்கன் கடையில் சிம்னி விளக்கு திரி வாங்க வருவான்.
“மாலு எப்டிரா இருக்கா” என்று நக்கலாக கேட்டால், பதிலே சொல்லமாட்டான்.
“சம்பத்து… நீயே கணக்கு பண்ணா எப்படிரா? ஒரு தடவை அவளை எங்கிட்டயும் விட்டுப்பாரேன்” என்று பாச்சா கேட்டபோது ஆக்ரோஷமாகப் பாய்ந்து இரண்டு பேரும் புழுதியில் புரண்டார்கள். சண்டையில் பாச்சாவின் இடுப்பு வேஷ்டி கழண்டுபோய் அன்றைக்குப் பார்த்து அவன் கோவணம் கட்டாததால், இடுப்புக்குக் கீழ் ஒன்றுமில்லாமல் உள்ளே ஓடியது மறக்கமுடியாத நிகழ்ச்சி (அவனைப் பிற்காலத்தில் ஏ.ஜி. ஆபீஸில் பெரிய ஆபீஸராக நினைத்துப் பார்க்கமுடியவில்லை. அந்தக் கணத்தின் வேடிக்கைதான் மனசில் தங்கி இருந்தது).
ஒரு நாள் மாலாவையும் அந்தப் பையன் சம்பத்தையும் காணோம்… என்ன என்னவோ வதந்திகள். இரண்டு பேரையும் – திருச்சி ராஜா டாக்கீஸில் பேக் பெஞ்சு டிக்கெட்டில் பார்த்ததாக சிலரும், தூத்துக்குடி எக்ஸ்பிரஸில் ஒரே சால்வையை இரண்டு பேரும் போர்த்திக்கொண்டு பயணித்ததைப் பார்த்ததாக சிலரும்சொன்னார்கள். ஓவர்சியர் எதுவும் போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுத்ததாகத் தெரியவில்லை. ‘எங்களை யாரும் தேடவேண்டாம்’ என்று எழுதியிருந்த கடிதத்தைக் கண்ணால் பார்த்தேன் என்று ராமன் சத்தியம் பண்ணிச் சொன்னான். ஓவர்சியர் வெளியே தைரியமாக இருந்தாலும் உள்ளே மருகிப்போய்விட்டார் என்று சொன்னார்கள். மாமி இந்த அவமானத்துக்குப் பிறகு வெளியே வருவதே இல்லை.
இந்தக் காதல் கதை சட்டென்று சப்பென்று முடிந்துவிட்டது.
ஒரு நாள் மாலை, மாலா எப்போதும் போல கையில் பித்தளைக் குடத்துடன் தண்ணீர் பிடிக்க வந்தாள். எதுவுமே நடக்காததுபோல் என்னைப் பார்த்து ‘சௌக்கியமா’ என்றாள். முகத்தில் ஒன்றிரண்டு பருக்கள் புதுசாக வந்திருந்தன. நான் காதோரம் சிவந்து அவசரமாக பாட்டியிடம் “பாட்டி… அந்தப் பொண்ணு வந்திருக்கு” என இதை அறிவிக்க, “ஏண்டி, நீ ஓடிப்போயிட்டேன்னு எல்லோரும் பேசிண்டாளே” என்று பாட்டி கேட்டேவிட்டாள்.
“இல்லை பாட்டி… லால்குடில மாமாவுக்கு சீரியஸா இருந்தது. பார்க்கப் போனேன்” என்று சொன்னாள், அறியாத விழிகளுடன். சாயங்காலம் அவள் வீதியில் வழக்கம்போல் குரங்கு பெடல் பழகுவதை நாங்கள் ரங்கு கடையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.
“ஒண்ணுமே நடக்கலை போல இருக்கா பாரு… என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு?”
“மாமாவுக்கு உடம்பு சரியில்லையாம். அதுக்குத்தான் போயிருந்தாளாம்.”
“டேய் பித்துக்குளி… இவளுக்கு மாமாவே கிடையாது. தெரியுமா?” என்று ரங்கு அடித்துச் சொன்னான்.
சம்பத்தைக் கொஞ்ச நாளாகவே காணோம். அவனை மணச்சநல்லூரில் ஆள் வைத்து அடித்துப் போட்டுவிட்டதாக பேசிக்கொண்டார்கள். மாலா நிஜமாகவே லால்குடிக்கு போனாளா, ஓடிப் போனாளா என்கிற மர்மம் விடுபடவே இல்லை.
உண்மையான காதலை நான் சந்திக்கவே இல்லையா? காதலர் தினம் என்பது வாலண்டைன் கார்டு விற்பவர்களுக்காக ஏற்பட்ட மாயையா ?
என்னுடன் மீனம்பாக்கத்தில் பணிபுரிந்த மார்ட்டின் என்கிற ஒரு ஆங்கிலோ இந்திய கம்யூனிகேஷன் ஆபீஸர் ஒரு பெண்ணைக் காதலித்தார். அந்தப் பெண் அவரைவிட இளமையும் தகுதியும் பெற்ற மற்றொருத்தரைக் காதலித்தாள். அவரிடம், “ஸாரி மார்ட்டின்… நான் உங்களைக் காதலிக்கவில்லை” என்று சர்ச்சில் வைத்து சொல்லிவிட்டாள். மார்ட்டின் மனம் தளராமல், “அதனால் என்ன… நான் உன்னைக் காதலிக்கிறேன். அது போதும்” என்று சொல்லிவிட்டார். அவள் கணவனிடம் அவளுடன் கடிதத் தொடர்பு வைத்துக்கொள்ள அனுமதி கேட்டார்.
அந்தப் பெண் கல்யாணத்துக்குப் பின் ஆஸ்திரேலியா சென்றுவிட்டாள். அங்கே அவளுக்கு ஐந்து பெண் குழந்தைகள் பிறந்தன. மிக அழகான கையெழுத்தில் வாராவாரம் ஆஸ்திரேலியாவுக்குக் கடிதம் எழுதுவார். “என் ரோஸி எப்படி இருக்கிறாள். என் ஏஞ்சல் நன்றாக சாப்பிடுகிறாளா… ஜெனிஃபர் படிக்கிறாளா?” என்று குழந்தைகளை விசாரிப்பார். அவர்களை இவரிடம் லீவுக்கு அனுப்பினாள். அவர் அவர்களுக்குப் படிப்பதற்கு பணம் அனுப்பினார்.
பல வருடங்கள் கடந்து அந்தப் பெண்ணின் கணவன் ஆஸ்திரேலியாவில் இறந்துபோனான். ஐந்து குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு பல்லாவரம் வந்துவிட்டாள். மார்ட்டின் தான் காதலித்த பெண்ணை அவள் ஐந்து குழந்தைகளுடன் தன்னுடைய ஐம்பத்தாறாவது வயதில் கல்யாணம் செய்துகொண்டார்.
நான் வாழ்நாளில் சந்தித்த ஒரே ஒரு உண்மைக் காதலாக இதை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சொன்னபோது அவர் “ஹி இஸ் நாட் நார்மல்” என்றார்.
– சுஜாதா