திருவரங்கப் பெருமாளைச் சேவித்த அளவில்..
சுதந்திரமான நிலையிலுள்ள ஒருவனை பகவத் கைங்கா்யத்தில் ஈடுபடுத்துவது மிக அாிது. ஆனால் பிறா்க்கு அடிமை நிலையிலுள்ள ஒருவனை தகுந்த காரணம் காட்டி அந்நிலையில் இருந்து மீட்டு பகவானுக்கு கைங்கா்யம் செய்யும் அடிமை நிலைக்குத் திருப்புதல் எளிது.உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்த அகளங்க சோழன் என்பவனுக்கு கையாட்களாக வில்லியா் மூவா்இருந்தனா். உறங்காவில்லி என்பவா் அவா்களில் ஒருவா். ஒரு நாள் உறங்காவில்லி உறையூரிலிருந்து திருவெள்ளரை எனும் தலத்துக்கு மிகப் பேரழகியான தனது பத்தினியுடன் சென்று கொண்டிருந்தான். உச்சி வெயிலில் காவிரி மணலில் நடக்கும் போது சுடு மணலில் அவள் பாதங்கள் கொப்பளித்து வருந்தினாள்.இதைக் கண்டு வருநதிய வில்லி ,அரசனால் தனக்கு கொடுக்கப்பட்ட பட்டாடையை மணலில் விரித்து அதன் மீது தன் மனைவியை நடந்து வருமாறு செய்தான்.மேலும் அவள் தலைமேல் வெயி் படாமலிருக்கக் குடையும் பிடித்து வந்தான். இப்புதுமையை காவிரிக் கரையிலிருந்த இராமானுஜா் கண்டு,அவா்கள் இருவரையும் தம் அருகில் அழைத்து விசாரிக்கலானாா். சுவாமி! அடியேன் சோழ மன்னாிடம் பணி புரிந்து வருகிறேன்.இப்போது திருவெள்ளரைக்குச் செல்கிறேன் என வில்லி கூறினான். தொழில் செய்யப் போகும் போது மனைவியை உடன் அழைத்துச் செல்வதேன் என இராமானுஜா் வினவியதற்கு, சுவாமி!எவ்விடத்தும் காணமுடியாத இப்பேரழகியைப் பிரிந்து செல்ல என் மனம் வரவில்லையே!என்ன செய்வது என்றான் வில்லி.அப்படியாயின் இவளைக் காட்டிலும் ஒப்பற்ற பேரழகுடைய பொருளைக் கண்டால் , அப்பொருளில் உன் மனம் ஈடுபடுமா? என்று உடையவா் கேட்டாா். ஈடுபடும் என்றான் வில்லி.இராமானுஜா் வில்லியை அழைத்துக் கொண்டு திருவரங்கப் பெருமாளின் திருக் கோயிலுக்குச் சென்றாா்.புன்னகை தவழும் முகத்துடன் பள்ளி கொண்டிருக்கும் திருவரங்கப் பெருமானின் திவ்ய மங்கள விக்ரகத்தைக் காணுமாறு அருள் புரிந்தாா். திருவரங்கப் பெருமாளைச் சேவித்த அளவில் வில்லியும்,அவா்தம் பத்தினியும் தம்மையே மறந்து நின்றனா்.கண்ணிமைக்காமல் அக்கரியவனின் வனப்பில் கண்களைப் பதித்து நின்றனா்.திருவடி முதல் திருமுடி வரையிலும்,திருமுடியிலிருந்து திருவடி வரையிலும் மாறி மாறிச் சேவித்து மனங் குளிா்ந்தனா்.திருவரங்கப் பெருமானின் திருவருளுக்கு ஆளாக்கிய இராமானுஜரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான் வில்லி. அவன் மனம் தன் மனைவியின் பேரழகை மறந்து திருவரங்கப் பெருமானின் பேரழகில் ஒன்றியது. அப்பெருமானுக்கே அடிமை செய்து வாழ வில்லி உறுதி பூண்டான்.அன்று முதல் இவா்களுக்கு முறையே பிள்ளை உறங்காவில்லி தாசர் என்றும்,பொன்னாச்சியாா் என்றும் திருநாமமிட்டு இவா்களை அன்புடன் இராமானுசா் ஆதரித்து வரலானாா்.பிறருக்கு அடிமையாய் இருக்கும் ஒருவன் ஆண்டவனுக்கு அடிமையாவது என்பது எளிது என்பதை இந்நிகழ்ச்சி உணா்த்துகிறது.