கிருஷ்ண நீதி
பாரதப் போர் பதினெட்டாம் நாள். போர் முடிந்து எங்கும் அமைதி. கிருஷ்ண பரமாத்மா போர்க் களத்தை சுற்றி வருகிறார். சாகும் தருவாயில் ஒரு வீரன்
‘தண்ணீர், தண்ணீர் ‘ எனக் கதறுகிறான்.
கிருஷ்ண பகவான் அவன் வாயில் தண்ணீர் ஊற்றி அவனை அமைதிப் படுத்துகிறார்.
கண் விழித்துப் பார்த்த அவன், ” கிருஷ்ணா, இதோ நான் இறக்கப் போகிறேன், ஆனால் நான் புண்ணியம் செய்தவன். உன் கையால் நீர் கொடுத்தாய். அது போதும். சாகு முன் ஒரு சந்தேகம். அதையும்
தீர்த்து வை” என்கிறான்.
“சொல்” என்கிறார் கிருஷ்ணர்.
” உன்னைப் போல் நானும் ஒரு தேரோட்டி. நீ அர்ஜுனனுக்கு த் தேரோட்டினாய், நான் ஒரு ராஜா விற்கு தேரோட்டினேன். அந்த ராஜா இறந்து விட்டார். நான் சாகக்கிடக்கிறேன்.
நான் ஏன் சாக வேண்டும்? நான் தேரை மட்டும் ஆணைப்படி செலுத்தினேன். ஓர் உயிரைக்கூடக் கொல்லவில்லை. என் குடும்பத்தைக்
காப்பாற்ற வேலை தேடி வந்தேன். நான் சாமான்யன். எனக்கு ஏன் இந்த தண்டனை? நான் என்ன குற்றம் செய்தேன்? “
” வீரனே, நீயும் நானும் குற்றம் செய்தவர்கள்.
இந்த யுத்தம் பலருடைய கோபம், வெறுப்பு, ஆசை, பேராசை இவற்றால் நடந்தது. இந்த யுத்தம் தவறு என்று நினைத்த பலராமரும், விதுரரும் இதை விட்டு விலகினார்கள்.
எல்லா அரசர்களும் தங்கள் சுயநலத்திற்காக இங்கு வந்தனர். நீயும் பணமும் பொருளும் கிடைக்கும் என்றுதான் வந்தாய். இங்கு நடந்த கொலைகளில் உனக்கும் பங்கு உண்டு.
அநீதி நடக்குமிடத்தில் பங்கு கொண்டால் நிச்சயம் தண்டனை உண்டு. உனக்கு இன்று கிடைத்தது. எனக்கும் தண்டனை உண்டு. அதை நான் அறிவேன் “
அந்த வீரன் அமைதி அடைகிறான்.
நம்மைப் போன்ற சாமானியர்கள் சமூகத்தில் சுற்றி நடக்கும் ஊழல்கள், கொள்ளைகள்
இவற்றை அந்த தேரோட்டியைப் போல் பார்க்கிறோம். எங்களுக்கு ஏன் தண்டனை என்று கேட்கத் தோன்றுகிறது.
தெரிந்தோ தெரியாமலோ நாம் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களுக்குத் துணை போகிறோம்.
அதற்குரிய தண்டனையை அனுபவிக்கிறோம்.
அதுவே கிருஷ்ண நீதி
கிருஷ்ணர் அந்த தேரோட்டி க்கு சொன்ன உபதேசம் நமக்கும் பொருந்தும்.
நாம் பலராமரைப் போலவும் விதுரர் போலவும் துறவு கொள்ள முடியாது. அனுபவிக்கிறோம்.