பாண்டியன் கொண்டை

பாண்டியன் கொண்டை
0Shares
பாண்டியன் கொண்டை
அரங்கனின் ஆபரணங்களில் முக்கியமானது பாண்டியன் கொண்டை.
முக்கியத் திருவிழாக்களில் அரங்கன் பாண்டியன் கொண்டை அணிந்தே வெளிவருவார்.
அரங்கனே தன் பக்தர்களில் ஒருவரைக் கொண்டு இந்தப் பாண்டியன் கொண்டை என்னும் ரத்தினக் கிரீடத்தைச் செய்யச் சொன்னாராம்.
அவர் தான் அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி..
அவரோ பரம ஏழை. உஞ்சவ்ருத்தி எடுத்துப் பணம் சேர்த்து இந்தப்பாண்டியன் கொண்டையைச் செய்து கொடுத்தாராம். அவர் யாருனு பார்ப்போமா?
தமிழ் நாட்டில் சங்கீத மும்மூர்த்திகளாக தியாகராஜ சுவாமிகளையும், முத்துசாமி தீக்ஷிதர், ச்யாமா சாஸ்திரிகள் ஆகியோரைச் சொல்கிறோம். தமிழிசையில் மூவராக அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத் தாண்டவர் ஆகியோரையும் சொல்கிறோம்.அப்படித் தெலுங்கிலும் மும்மூர்த்திகள் உண்டு. ஆந்திர நாட்டில் இப்படிச் சொல்லப்படுபவர்கள் தலப்பாக்கம் அன்னமாசார்யா, பத்ராசலம் ராமதாசர், அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி ஆகியோர்.
அவர் திருமலையில் திருமலையப்பன் சேவையிலே ஈடுபட்டு, . பின்னர் அவர் காஞ்சிக்கு வரதராஜப் பெருமாளிடம் ஈடுபாடு கொண்டு தினமும் உஞ்சவ்ருத்தி மேற்கொண்டு அதில் கிடைக்கும் பொருட்களை, தான்யங்களைப் பணமாக மாற்றி அதன் மூலம் வரதராஜப்பெருமாளின் சந்நிதிக்குக்ப் பல கைங்கரியங்களைச் செய்து வந்தார்.
காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் செய்தார். தன்னால் இயன்ற பொருளைச் சேர்த்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் மாமண்டூரில் நிலம் வாங்கி வைத்தார். நந்தவனத்தில் கைங்கரியம் செய்து வந்த வேங்கடாத்ரி சுவாமியைப் பாம்பு தீண்டியது.. அவர் சற்றும் அஞ்சாமல் பெருந்தேவித் தாயார் சந்நிதிக்குச் சென்று பல கீர்த்தனைகளைப் பாடி அங்கேயே மயங்கி விழுந்தார். பின்னர் தூங்கி எழுந்திருப்பவர் போல் எழுந்து பெருமாள் சந்நிதிக்கும் சென்று பிரசாதங்கள் வாங்கிக் கொண்டார். கொடிய பாம்பின் விஷமும் அவரை ஒன்றும் செய்யவில்லை..
இப்படிப் பல கோயில்களுக்கும் திருப்பணி செய்து வந்தவரைத் தன் கோயிலுக்கு வரவழைக்க அரங்கன் முடிவு செய்தான். ஒரு நாள் அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகளின் கனவில் அரங்கன் நம்பெருமாளாகிய உற்சவக் கோலத்தில் தோன்றித் தனக்குப் பாண்டிய மன்னனால் சமர்ப்பிக்கப்பட்ட பாண்டியன் கொண்டை பழசாகிப் பழுதடைந்து விட்டதாகவும், புதியது தேவை என்றும் கேட்டார்.
வேங்கடாத்ரி சுவாமி இருந்ததோ காஞ்சியிலே. அங்கே குடி கொண்டிருந்த வரதராஜரைப் பிரார்த்தித்துக் கொண்டு எந்தவிதமான அளவுகளும் இல்லாமல் அரங்கனின் பாண்டியன் கொண்டைக்கு மாதிரியாக ஒன்றைச் செய்தார் வேங்கடாத்ரி சுவாமிகள். அதை எடுத்துக் கொண்டு திருவரங்கம் அடைந்தார். அவர் வருவதை அறிந்த கோயிலண்ணன், பட்டாசாரியார் சுவாமி, உத்தம நம்பி மற்றும் கோயிலின் மற்ற ஊழியர்கள் அனைவரும் அவரை வரவேற்றனர். உள்ளே அரங்கனைக் கண்ட வேங்கடாத்ரி சுவாமிகள் தன்னை மறந்து அரங்கன் மேலும், நம்பெருமாள் மேலும் பற்பல கீர்த்தனைகளைப் பாடினார்.
“நின்னுகோரியுன்னா ராரே!” அவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். சுவாமிகள் கொண்டு சென்ற மாதிரிக் கிரீடம் நம்பெருமாளுக்கு வைத்துப் பார்த்தால் என்ன ஆச்சரியம்! மிக அழகாகப் பொருந்திவிட்டது. கோயிலின் ஊழியர்களும் மற்றப் பெரியோர்களும் சுவாமிகளின் இந்தத் திறமையையும், அபூர்வமான ஞானத்தையும் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஶ்ரீரங்கம் முழுதும் சுவாமிகளின் புகழ் பரவியது. ஆயிற்று!
மாதிரிக் கொண்டை போல இப்போது அசலில் செய்ய வேண்டும். அதற்குப் பணம் வேண்டும். வேங்கடாத்ரி சுவாமி ஒரு சபதம் எடுத்துக் கொண்டார். பாண்டியன் கொண்டையைச் செய்ய அன்றாடம் குறைந்த பட்சமாகப் பத்து ரூபாய் தேவை. ஆகவே தினம் தினம் பத்து ரூபாய் கிடைக்கும் வரை தான் பட்டினியாக இருப்பது எனத் தீர்மானித்தார். சில நாட்கள் கிடைத்தது. பல நாட்கள் எதுவும் கிடைக்கவில்லை. அப்போது அவரின் முக்கியச் சீடர்கள் ஆன “தரே வீடு” வெங்கடசாமி நாயுடு, புதுச்சேரி அப்பாசாமி நாயுடு ஆகியோர் மனமுவந்து பத்து ரூபாய்களைக் கொடுத்து உதவினார்கள். பணம் கிடைக்கக் கிடைக்க அரங்கனின் பாண்டியன் கொண்டைத் தயாரிப்பும் மெல்ல மெல்ல நடந்து வந்தது.
கொண்டையில் பதிக்க ஒரு அங்குல அளவில் சதுர வடிவிலான மரகதக் கல் ஒன்று தேவைப் பட்டது. வேங்கடாத்ரி சுவாமி மரகதப் பச்சைக்கல்லைப் பெறப் பல வழிகளிலும் முயன்றார். அப்போது அரங்கன் அவர் கனவில் மீண்டும் தோன்றி, கல்கத்தாவில் உள்ள வைர வியாபாரி ஒருவரின் வீட்டில் வடக்கு மூலையில் உள்ள இரும்புப் பெட்டியில் கொண்டையில் பதிக்கத் தேவையான மரகதப் பச்சைக்கல் இருப்பதாகவும், அதை வேண்டிப் பெறுமாறும், அந்த வைர வியாபாரியின் பெயர் மாதவ சேட் என்றும் தெரிவித்தார்.
சுவாமியின் பக்தர்களின் ஒருவரான காசிதாஸ் செளகார் என்பவர் மாதவ சேட்டின் கல்கத்தா விலாசத்தைப் பெற்று மரகதப் பச்சையை அரங்கனுக்காகக் கேட்டுக் கடிதம் எழுதினார். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மாதவ சேட் இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ந்தார். அரங்கனே தன் கொண்டையில் வைக்க மரகதக் கல்லைக் கேட்டிருக்கிறான். அதுவும் நம்மிடம். இது என்ன விந்தை? இரும்புப் பெட்டியைத் தலைகீழாகப் புரட்டிப் பார்த்த மாதவ சேட் தன் தந்தையால் வைக்கப்பட்ட மரகதக் கல்லைக் கண்டெடுத்துவிட்டார். அவருக்கோ, அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கோ அந்தக் கல் இருந்த விபரம் அன்று வரை தெரியவில்லை. இதை அரங்கன் அறிந்து சொன்னது கல் அவனுக்குச் சொந்தம் என்பதால் அன்றோ! கல்லை உடனடியாக அனுப்பி வைத்த மாதவ சேட், கூடவே தன்னுடைய பங்காக ஆயிரம் ரூபாய் பணமும் அனுப்பி வைத்தார்.
கொண்டை தயாராகி வந்தது. ஆனால் திடீரென கொண்டையைச் செய்து வந்த பொற்கொல்லனுக்குப் பேராசை பிடித்து விட்டது. ஆகவே மாதவ சேட் அனுப்பிய விலை உயர்ந்த மரகதக் கல்லை ஒளித்துவிட்டு அதற்கு பதிலாகச் சாதாரணப் பச்சைக்கல் ஒன்றை வைத்து விட்டான். இப்போதும் அரங்கன் விடவில்லை. வேங்கடாத்ரி சுவாமியின் கனவில் தோன்றி பொற்கொல்லன் கல்லை ஒளித்த விபரத்தைத் தெரிவித்து விட்டார். தன் சீடர்களோடு பொற்கொல்லனைச் சந்திக்கச் சென்ற வேங்கடாத்ரி சுவாமியைக் கண்ட கொல்லன் முதலில் தனக்கு எதுவுமே தெரியாது என சாதித்து விட்டான். ஆனால் அப்பாசாமி நாயுடுவும் மற்றும் சிலரும் அவனை மிரட்டி விசாரிக்கவே, கல்லை மாற்றியதை ஒப்புக் கொண்டு அதைத் திரும்பக் கொடுத்தான். உண்மையான மரகதக் கல் பதிக்கப்பட்டுப் பாண்டியன் கொண்டை தயாராகி அரங்கனுக்குச் சமர்ப்பிக்க எடுத்துச் செல்லப்பட்டது.
தன் சீடர்களுடன் கொண்டையை ஊர்வலமாக எடுத்துச் சென்றார் வேங்கடாத்ரி சுவாமிகள். திருவரங்கத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அல்லது பரமபத ஏகாதசி என அழைக்கப்படும் நாளில் ருத்ரோகாரி ஆண்டில் 1863 ஆம் ஆண்டில் அந்தப் பாண்டியன் கொண்டை அரங்கனுக்குச் சமர்ப்பிக்கப் பட்டது.
இன்றளவும் அந்தப் பாண்டியன் கொண்டை முக்கிய தினங்களில் மட்டுமின்றி வைகுண்ட ஏகாதசி அன்றும் நம்பெருமாளை அலங்கரித்து வருகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *