மங்கள வாழ்வு தரும் குங்கும பிரசாதம் பற்றிய பதிவுகள்
பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் தங்கள் நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் அம்பாளின் குங்கும பிரசாதத்தை அணிந்துகொண்டால், எந்த ஆபத்தும் அணுகாது.
குறிப்பாக திருமணமான பெண்கள் தங்கள் நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் இட்டுக் கொண்டால்,பிரம்மராட்சஸ் போன்ற ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
சிவபெருமானுக்கு விபூதி ஐஸ்வர்யமாகத் திகழ்வதுபோல், அம்பிகைக்கு குங்குமம் ஐஸ்வர்யமாக திகழ்கிறது.
அம்பிகைக்குக் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு, அர்ச்சனை குங்குமத்தைப் பிரசாதமாகப் பெற்று அணிந்துகொண்டால், வீட்டில் அனைத்து மங்கலமும் ஏற்படுவதுடன் ஐஸ்வர்யங்களுக்கும் குறைவே இருக்காது.
*நெற்றியில் குங்குமம் வைக்கும் முறை !*
பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.
குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.
மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.
கோவிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் இடுவதால், குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் இடுவது சிறப்பு.
ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் இடுவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள்.
நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்