துரியோதனன் மகாபாரத போரில் தொடை பிளக்கப் பட்டு, மரணப்படுக்கையில்
உயிர் போகாமல் வேதனையோடு கிடந்த போது ஸ்ரீ கிருஷ்ணர் அந்த இடம் வந்தார். உயிர் அவனை விட்டுப் பிரியவில்லை காரணம், துரியோதனன் மனதில் இருந்த அந்த மூன்று கேள்விகள் தான்.
அவனால் பேச இயலாத சூழ்நிலையில், தன் மூன்று விரல்களை, மேல்நோக்கி உயர்த்தினான்.
துரியோதனன் உயிரைப் பிரியவிடாமல் வைத்திருந்த அந்தக் கேள்விகளை கிருஷ்ணர் அறிந்தார்.
(1) போர் நடந்த சமயத்தில் நான் அஸ்தினாபுரத்தைச் சுற்றி ஒரு கோட்டையை எழுப்பியிருந்தால், என்ன செய்திருப்பாய் ?
(2) துரோணாச்சாரியாரின் மறைவிற்குப் பிறகு, அசுவத்தாமனை சேனாதிபதியாக்கி இருந்தால், என்ன செய்திருப்பாய் ?
(3) விதுரரைப் போர் புரிய வைத்திருந்தால். என்ன செய்திருப்பாய் ?
துரியோதனனின் சஞ்சலத்தை, பகவான் கிருஷ்ணர் அறிந்தார். எவ்வளவு தான் துரியோதனன் கெட்டவனாய் இருந்தாலும், அவன் படும் துயரத்தை, கிருஷ்ணரால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. சம்பந்தியாச்சே!!!
துரியோதனன் அருகில் வந்த கிருஷ்ணர், அவனைக் கருணையுடன் பார்த்து, அவனின் கைகளை ஆதரவாய்ப் பற்றி, “துரியோதனா, உனது கேள்விகளுக்கான பதில்கள்
(1) ஒரு வேளை நீ அஸ்தினாபுரத்தைச் சுற்றிக் கோட்டை எழுப்ப முயன்றிருந்தால், நான் நகுலனை அஸ்தினாபுரத்திற்கு அனுப்பியிருப்பேன். நகுலனின் திறமை – நகுலன் அளவிற்கு, குதிரை ஓட்ட எவராலும் இயலாது. மழை பெய்யும் போது ஒரு துளி விழுந்து, அடுத்த துளி விழுவதற்குள், நனையாமல் நகரும் அளவிற்கு வேகமாய்க் குதிரையை ஓட்டும் திறமை பெற்றவன் நகுலன்.
ஒரு வேளை துரியோதனன், அஸ்தினாபுரத்தைச் சுற்றிக் கோட்டை எழுப்ப முயற்சி செய்திருந்தால், நகுலனை அஸ்தினாபுரம் நோக்கி அனுப்பி, அந்தக் கோட்டையைத் தகர்த்திருப்பேன் என்றார்.
(2) அசுவத்தாமனை ஒரு வேளை படை சேனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தால், நான் தர்மரைக் கோபப்பட வைத்திருப்பேன் என்று கிருஷ்ணர் கூறினார்.
ஏனெனில், தர்மரின் கோபம் எதிரில் நிற்கும் எவ்வளவு பெரிய மாவீரனையும் எரித்துச் சாம்பலாக்கிவிடும்.
(3) ஒரு வேளை விதுரரைப் போர் புரிய வைத்திருந்தால், நான் (கிருஷ்ணன்) ஆயுதம் ஏந்திப் போர் புரியத் தொடங்கியிருப்பேன் என்றார் கிருஷ்ணர்.
மரணப்படுக்கையில் இருந்த துரியோதனன், தன் மனதிலிருந்த கேள்விகளுக்கு, கிருஷ்ணர் கூறிய பதில்களால் நிம்மதியுற்றான்.
தன் மனசஞ்சலங்கள் நீங்கிய மகிழ்ச்சியில், தன் உயிர் நீத்தான், வீரசொர்க்கம் நோக்கி அவரது ஆன்மாவை செல்ல வைத்தார் க்ரிஷ்ணர்.
-சர்வம் க்ரிஷ்ணார்ப்பணம்