இலக்கியங்களை எளிமைப்படுத்தி…
“ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை.”
(“மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.”
(குறள் :1118)
“அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை.”
(“மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.” (குறள் :1112)
“அவள் இல்லாமல் நானில்லை,
நான் இல்லாமல் அவள் இல்லை.”
(“வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.” (குறள்: 1124)
வாலி எழுதிய இந்தப் பாடலில், திருக்குறளை என்ன அழகாக எளிமைப்படுத்தி தந்திருக்கிறார் ?
இலக்கியப் பாடல்களை எளிமையாக எடுத்து சற்று திரைபாடல் இசைக்கு ஏற்றாற் போல் மாற்றி எழுதுவதில் கண்ணதாசன்தான் எல்லோரையும் மிஞ்சும் அளவுக்கு, ஏராளமாக எழுதித் தள்ளி இருக்கிறார். (இசை அமைப்பாளர் பலர் அவ்வாறு பிற இசையிலிருந்து எடுத்து கொஞ்சம் மாற்றி புதிதாக காட்டுவர்.. அதில் தமிழ்த் திரை இசையமைப்பாளர் தேவா திறமையானவர்)
இது பற்றி கண்ணதாசன் சொன்னது :
“பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள், பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன. ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக் கூடிய வலிமை பெற்றது . அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விடயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.”
இப்படிச் சொன்ன கண்ணதாசன், ‘அன்னை இல்லம்’ படத்துக்கு பாடல் எழுதப் போகும்போது “கலிங்கத்துப்பரணி”யை கையில் எடுத்துக் கொண்டார்.
இதோ, கலிங்கத்துப் பரணி வரிகள் :
“வாயின் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ.”
இதை கண்ணதாசன் இப்படி எளிமையாக, இனிமையாக தந்திருக்கிறார் , “அன்னை இல்லம்” பாடலில் :
“வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம். ”
இலக்கியங்கள் யாவுமே இனிமையானவை !
“மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் – செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து.”
( இது நளவெண்பா 184)
படித்தார் கண்ணதாசன்.
வடித்தார் இந்த வரிகளை !
“பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…”
பாடல்: “ நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?”
படம்: இரு வல்லவர்கள்
ஆம். இலக்கியங்களை எளிமைப்படுத்தி எல்லோரிடமும் கொண்டு சென்று சேர்ப்பதில்
கண்ணதாசன் – வாலி …
“இரு வல்லவர்கள்.”
ஆம், இருவருமே வல்லவர்கள்தான் !