ஸ்ரீராமர்_தோற்றது தெரியுமா?

ஸ்ரீராமர்_தோற்றது தெரியுமா?
0Shares
ஸ்ரீராமர்_தோற்றது தெரியுமா?
கோதாவரி நதி. ஸ்ரீராமபிரானுக்கும் சீதாப்பிராட்டிக்கும் நீச்சல் போட்டி. நதிக்கு நடுவில் உள்ள பாறையை யார் முதலில் தொட்டுவிட்டுக் கரைக்கு வருகிறார் என்பதுதான் போட்டி. அந்தப் பாறையின் மேலே நடுவராக அமர்ந்திருக்கிறார் ஸ்ரீலட்சுமணர். ராவணன் எனும் அரக்கனையே அழித்தொழிக்க அவதரித்த ஸ்ரீராமருக்கு இதெல்லாம் ஒரு போட்டியா என்ன? கரையில் இருந்து சீதை பதினைந்து அடி தூரத்தைக் கடப்பதற்குள், அவர் பாறையைத் தொட்டுவிட்டுத் திரும்பி, பாதி தூரத்தைக் கடந்து வந்து கொண்டிருக்கிறார். இறுகிய முகத்துடன், மூச்சிழுத்துக்கொண்டு, கைகளை வீசி, கால்களை உதைத்து அரக்கப்பரக்க நீச்சலடித்துக்கொண்டு, பாறையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறாள் சீதை.
பரிதவிப்பான சீதையின் திருமுகத்தைப் பார்த்ததும், ஸ்ரீராமபிரானுக்குள் ஒரு யோசனை… ‘இங்கே அரக்கனுடனா எனக்குப் போட்டி? யாரை வெல்ல இப்படி மல்லுக்கட்டிக்கொண்டு, வெற்றி பெறும் முனைப்புடன் வெறித்தனமாக நீச்சலடிக்கிறேன்? இதோ… இவள் என் பிரிய சகி அல்லவா? என் அன்புக்கு உரிய இல்லாள் அல்லவா? அவளைத் தோற்கடித்துவிட்டு, அந்த வெற்றியை எங்கே, எவரிடம் பகிர்ந்துகொண்டு கொண்டாடுவதாம்? தீராத பகையாளியைத் தோற்கடிக்கிற புத்தியுடன் அல்லவா இந்தப் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறேன்?’ என்று நினைத்த ஸ்ரீராமர், அப்படியே தண்ணீருக்குள் மூழ்கினார்; அங்கேயே அப்படியே அமர்ந்து கொண்டார்.
அதையடுத்து, சீதாதேவி வேகமாக நீந்திக் கரையை அடைந்தாள்; வெற்றியும் பெற்றாள். அதுவரை நடுவராக இருந்த ஸ்ரீலட்சுமணர், தடாலென்று கட்சி மாறி, அண்ணியாருடன் இணைந்து, ‘என்ன அண்ணா! அடடா! இப்படி அநியாயமா தோத்துப் போயிட்டீங்களே’ என்று ஸ்ரீராமரைக் கேலி செய்தார். சீதையும் ஸ்ரீராமரை வெகுவாகக் கேலி செய்தாள்.
அசோகவனத்தில் சிறை இருந்தபோது, ஸ்ரீராமரை நினைத்தபடியே கிடந்தபோது, அங்கே ஸ்ரீஅனுமன் வர… அவனிடம் இந்தச் சம்பவங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, ‘ஹூம்… அவரும் நானும் எப்படியெல்லாம் சந்தோஷமும் குதூகலமுமாக வாழ்ந்தோம், தெரியுமா?’ என்றபடி ஏக்கப் பெருமூச்சு விட்டாளாம்!
இதைத்தான், ‘பத்தினிக்குத் தோற்பான் பரம ரசிகன்’ என்று சொல்லி வைத்தனர் நம் முன்னோர். ‘மனைவியைத் தோற்கடித்துவிட்டு வெற்றி பெற்ற பூரிப்பை எவரிடம் சொல்லிப் பெருமைப்பட முடியும்? அவளிடம் தோற்றுப் போனால், அந்தத் தோல்வியைக்கூட அவளிடம் பெருமைபடப் பேசி மகிழலாம்! இன்னும் சொல்லப் போனால், மனைவியிடம் தோற்றுப் போனால், வாழ்வில் ஜெயிக்கலாம்! ஆக, பெற்றோர்களுக்குக் கட்டுப்படுவதை ஸ்ரீகண்ணனும், மனைவிக்கு விட்டுக்கொடுப்பதை ஸ்ரீராமபிரானும் நமக்கு மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள். உணர்ந்து, தெளிந்து, செயல்படுபவர்கள் பாக்கியவான்கள்!
இந்த அருங்குணங்களால் திளைத்த ஸ்ரீஆண்டாள், ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்று உருகிப் பாடுகிறாள். சீதாபிராட்டியிடம் ‘மாயாசிரஸ்’ கொண்டு வந்து காட்டுகிறான் ராவணன். ‘இதோ, உன் கணவனின் தலை. அவன் இறந்துவிட்டான்’ என்று மாயத் தோற்றத்தை, கொய்த தலையைக் கையில் வைத்துக் காட்டுகிறான். ‘ஸ்ரீராமர் உயிருடன் இருக்கிறார்’ எனும் தகவல் ஏற்கெனவே தெரிந்துவிட்டது சீதாவுக்கு! எனவே, அவள் கலகலவெனச் சிரித்துக்கொண்டே, ‘அவர் சாகவில்லை’ என்றாள். ‘எப்படிச் சொல்கிறாய்?’ என்று ராவணன் கேட்டான். அதற்கு அவள், ”எப்போது நான் உயிருடன் இருக்கிறேனோ, அப்போது அவரும் உயிருடன் இருக்கிறார் என்றுதான் அர்த்தம். இப்போது, அவர் உயிருடன் இருக்கிறார். ஒருவேளை நீ சொல்வது போல், அவர் உயிருடன் இல்லை யெனில், இந்நேரம் நானும் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்!” என்றாள்.
நீயின்றி நானில்லை; ‘நானின்றி அவனில்லை!’ என்பார்கள். பரஸ்பரம் இந்த முக்கியத்துவத்தையும் பேரன்பையும் உணர்ந்து விட்டால், அந்தத் தம்பதியை எவராலும் எப்போதும் எதுவும் செய்துவிட முடியாது!
நம்மிடம் உள்ள குணங்களில் ஏதேனும் ஒன்று நம்மைப் போலவே வேறொருவருக்கும் இருந்தால், சட்டென்று அவர்கள் மீது சிநேகிதம், பிரியம், வாஞ்சை… நமக்கு வரும் அல்லவா?! பகவானும் அப்படித்தான்… அவனுடைய குணங்கள் நம்முடைய குணங்களாக இருந்துவிட்டால், இறைவன் நமக்கு சிநேகிதனாக, பிரியம் உள்ளவனாக, வாஞ்சை உள்ளவனாக இருப்பான்!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *