வெற்றிலை
———————-
வெற்றிலை பாக்கு போடுவது (தாம்பூலம் தரிப்பது) நம் நாட்டின் பண்டைய நாள் தொட்டு இருந்து வரும் வழக்கம்.
வெற்றிலையில் பாலில் இருப்பதை விட அதிகமான இரும்புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் இருக்கின்றன. உலகில் உள்ள மக்கள் தொகையில் பத்தில் ஒரு பகுதியினர் வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள். பொதுவாக இந்தப் பழக்கம் கிழக்கு நாடுகளில்தான் மிகுதி.
17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்த ரஷ்ய யாத்திரிகர் நிக்கொலாவ் மனூஸி என்பவர் தான் முதன்முதலாக வெற்றிலை பாக்கு போட்டு அனுபவித்ததை தன்னுடைய சுயசரிதையில் எழுதி இருக்கிறார்! சூரத் நகரில் அவருக்கு ஒரு பெண்மணி தாம்பூலம் கொடுத்து உபசரித்தபோது அதை நிக்கொலாவ் மென்று தின்றாராம். உடனே அவருடைய முகம் வியர்த்ததாம், தலை சுற்றியதாம். தாம் இறந்து விடுவோமோ என்று அஞ்சினாராம். அதைக் கண்ட அப்பெண்மணி அவர் வாயில் உப்புக்கரைசலை ஊற்றினாராம். அதன்பின் சரியாகிவிட்டாராம்.
நிக்கொலாவ் மனூஸிக்கு மட்டுமல்ல. முதன்முறையாக தாம்பூலம் தரிப்பவர்கள் பலருக்கு அம்மாதிரி நிலை ஏற்படுவது வழக்கம்.
சீனர்கள் வெற்றிலையை இடது கையால் வாங்க மாட்டார்கள். நம் நாட்டிலும் இதுபோல நம்பிக்கை உண்டு. மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் ஒரு தடவை வெற்றிலையை இடது கையால் எடுத்து விட்டாராம். அக்குற்றத்திற்கு கழுவாய் தேட நோன்பு நூற்றதாக வரலாறு கூறுகிறது.
திருமணத்திற்கு வெற்றிலை முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. தாலி இல்லாமல் கூட திருமணத்தை நடத்தி விடலாம். ஆனால் வெற்றிலை இல்லாமல் திருமணம் நடக்காது. திருமண நிச்சயம் செய்யும் சடங்குக்கு நிச்சய தாம்பூலம் என்றுதான் பெயர். திருமணப் பேச்சினை உறுதிப்படுத்தி அதன் இறுதியில் இருவீட்டாரும் வெற்றிலையைத்தான் மாற்றிக் கொள்வார்கள். அதனால்தான் அந்த சடங்கிற்கு நிச்சய தாம்பூலம் என்று பெயர் வந்தது.
திருமணத்திற்கு வெற்றிலை பயன்படுவதுபோல விவாகரத்திற்கும் பயன்படுகிறது. சுமித்ராவில் மனைவியைப் பிரிய விரும்பும் கணவன் வெற்றிலையை அவளிடம் கொடுத்து மூன்றுமுறை தலாக் சொல்லிவிட்டால் விவாகரத்து ஆகிவிட்டதாக அர்த்தம்.
குற்றவாளியை தூக்கில் இடுவதற்கு முன்பு அவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும் வழக்கம் பர்மாவில் நீண்ட காலமாகவே இருந்ததாம். சிறையில் அடைபட்டுக் கிடக்கும் கைதிகளுக்கு மலேரியா போன்ற நச்சுக் காய்ச்சல் வராமல் இருக்க அவர்களுக்கு வெற்றிலை கொடுப்பது நெதர்லாந்து வழக்கம்.
தமிழ்நாட்டில் திருவையாறு அருகில் உள்ள கண்டியூர், நடுக்கடை, கும்பகோணம் அருகில் ஆவூர், சுப்ரமணிய சாமி புகழ் சோழவந்தான் முதலிய ஊர்கள் வெற்றிலைக்குப் புகழ் பெற்றவை.
வெற்றிலை நல்ல கிருமி நாசினி:-
நாட்டுவைத்தியர்கள் வெற்றிலையில் வைத்து விழுங்குமாறு பல மருந்துகளைப் பரிந்துரை செய்வது அதன் மருத்துவ குணம் அறிந்ததால் தான்..
வெற்றிலைக்கு சமமான சீதோஷ்ண நிலை தேவை. அதிக வறட்சியைத் தாங்காது. கருகி விடும். அதிக மழையைத் தாங்காது. அழுகி விடும். வெற்றிலையை அகத்தி மரத்தில் படரவிட்டு தான் வளர்ப்பார்கள்.
வெற்றிலை சீரண சக்தியை மேம்படுத்துகிறது தெரியும் பலருக்கு தெரிந்திராத செய்தி ஒன்று. அது உறவையும் பலப்படுத்தும். மண பந்தம் உறுதியானதை அறிவிக்க பாக்கு மாற்றுவதினால் மட்டுமல்ல. முதலிரவில் பால் பழங்களோடு தாம்பூலத்தை வைப்பதினாலும்தான்..!
தமிழகத்தில் சுப நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, துக்க காரியங்களில் கூட தாம்பூலம் பங்களிக்கிறது.
பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.