உள்ள நாள் வரையிலே நன்மையும் தீமையும்
ஒன்றென்றே எண்ண வரம்தா
உறவோடு பகையையும் இரவோடு பகலையும்
ஒருமித்துப் பார்க்க் வரம் தா
வெள்ளம்போல் செல்வமும் வறுமையும் சமமென்று
விளையாடும் வாழ்க்கை வரம் தா
விதியென்றும் வலியதே மதியென்றும் சிறியதே
வினை தீர்த்து நல்ல துணை தா
பள்ளம் போல் இகழையும் மலைபோல் புகழையும்
பந்தாடும் வீர நிலைதா
பழிவாங்கும் பசியையும் பலசுவை உணவையும்
பதறாமல் கொள்ள வரம் தா
அள்ளியிடும் கையினால் அர்த்த சாமத்திலும்
அருள் செய்யும் அன்பு மயிலே
அறமுடைய வணிகர் குலம் சிலைவைத்த தேவியே
அழகு விசாலாட்சி உமையே!
KANNADASAN