உங்களுக்குத் தமிழ் இலக்கியம் பிடிக்குமா ?குற்றாலக் குறவஞ்சியில் திரிகூட ராசப்ப கவிராயரின் சந்தநயம் காண்கிறீர்களா ? வசந்தவல்லி பந்தடிக்கிறாள் .
(1) செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்
என்றாட – இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட – இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து
குழைந்தாட – மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.
(2) பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு
புரண்டாடக் – குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை
வண்டோட – இனி
இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை
திண்டாட – மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.
(3) சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை
நின்றாடப் – புனை
பாடக முஞ்சிறு பாதமு மங்கொரு பாவனை
கொண்டாட – நய
நாடக மாடிய தோகை மயிலென நன்னகர்
வீதியிலே – அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி
அடர்ந்துபந் தாடினளே.
(4) இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ
மோகினியோ – மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய
தோவெனவே – உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி
வீதியிலே – மணிப்
பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற்
பந்துகொண் டாடினளே.