மிகச்சிறந்த பொய்

0Shares
மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.
ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை அரச சபைக்கு வந்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.
அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தான்.
அந்த ஏழை சொன்னான், “அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் நான் வந்தேன்.”
அரசனுக்கு கோபம் வந்து விட்டது.
“யாரிடம் புளுகுகிறாய்.? நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?” என்று உரத்தக் குரலில் சுத்தினான்.
உடனே ஏழை சொன்னான், “அரசே, நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள். நான் பொய்யன் என்பதை உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டு விட்டதால், போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்” என்று பணிவுடன் கேட்டான்.
கோபத்திலும், அவசரத்திலும் தாம் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்த அரசன், “நீ சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ள முடியாது!” என்று அவசரமாக மறுத்தான்.
ஏழை விவசாயி சொன்னான்,
“சரி, நான் சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் போகிறது. உண்மை என்று ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா. எனவே, எனக்குத் தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து, கடனை அடையுங்கள்.”
கையைப் பிசைந்த அரசன், அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *