பித்துக்குளி முருகதாஸ் (Piththukkuli Murugadas, 25 ஜனவரி 1920 – 17 நவம்பர் 2015)
“நாடறியும் நூறுமலை நானறிவேன் சுவாமிமலை…”, “கந்தன் எனும் மந்திரத்தை..”, “பச்சை மயில் வாகனனை..”, “வேல்முருகா மால்முருகா..”, “உள்ளம் எனும் கோவிலிலே…”, “ஆடாது அசங்காது வா கண்ணா..”, “அலைபாயுதே கண்ணா..” போன்ற பாடல்களை உள்ளம் உருகப் பாடி, கேட்பவர்களையும் உருகவைத்த வசீகரக் குரலுக்குச் சொந்தக்காரர் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள்.
‘முருகா’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் இயற்பெயர் பாலசுப்ரமணியன். சித்தார்த்தி வருடம் தைப்பூச நன்னாளில் கோவை, செட்டி வீதி இல்லத்தில் 25.01.1920 இல் பிறந்தார்.
தந்தை சுந்தரம் அய்யர், தாயார் அலமேலு; தாத்தா அரியூர் கோபால கிருஷ்ண பாகவதர் (உஞ்சவிருத்தி பஜனை வித்வான்), பாட்டி ருக்மணியம்மாள்.
இளம் வயது பாலசுப்ரமணியனுக்குப் பக்திப் பாடல்களைச் சொல்லிக் கொடுத்தவர் பாட்டிதான். சகோதரி செல்லம்மாள், சகோதரர் கோபாலகிருஷ்ணன்.
இரண்டரை வயதில் தாயையும் 7 ஆவது வயதில் தந்தையையும் இழந்து தவித்தார் பாலசுப்ரமணியன். கோவை பெரியகடைவீதி உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு வரை கல்வி. இரட்டைத் தேர்ச்சி பெற்று வீராசாமி உயர்நிலைப் பள்ளிக்கு மாறினார். பழனியில் உள்ள சித்தி அன்னபூரணி அம்மாள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார்.
அப்படி சென்றிருந்த சமயத்தில், பழனி மலை வெட்டாற்றில் தீர்த்தம் எடுப்பதற்குச் செல்லும் வழியில் இருக்கும் பஞ்சவர்ண குகை பாலசுப்ரமணியனின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. போகர் என்ற சித்தர் 64 வகை மூலிகைகளைக் கொண்டு உருவாக்கிய முருகர் சிலை அங்கே இருந்தது. எத்தகைய நோயையும் தீர்க்கக்கூடிய அருமருந்தாக அந்த சிலை விளங்கியது. அந்த குகைக்குச் சென்று தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார் பாலசுப்ரமணியன். ஒரு பண்டாரம் ஆறுமுகனுக்கு எடுத்து வந்த அபிஷேக விபூதிப் பாத்திரம் 7 வயது சிறுவன் பாலசுப்ரமணியனின் தலையில் விழ நுனி முதல் அடி வரை விபூதிக் கோலம்.
பண்டாரம் ‘சரவணபவ’ என சொல்லச் சொல்ல அந்த ஆறெழுத்து மந்திரம் உன்னதமான உபதேசமாக உள்ளத்தில் பதிந்தது. உலக வாழ்வில் இவரது பாதையையும் அதுவே தீர்மானித்தது. அன்று வித்திட்ட ஆன்மீக மார்க்கம், 9 ஆம் வயதில் சித்தர் நாதயோகி ‘பிரும்மானந்த பரதேசியார்’ அருட்பார்வை ஆட்கொள்ள முளையிட்டது. அவரிடம் நாதயோக ஆரம்பப் பாடங்களை அக்கறையுடன் கற்றார். அவராலேயே ‘பித்துக்குளி’ என்றும் பெயர் சூட்டப் பெற்றார்.
கோவை திரும்பினாலும் எண்ணம் எல்லாம் பழனி மலைக் குகையிலேயே லயித்திருந்தது.
இடையில் உப்பு சத்தியாகிரகம், அன்னிய துணி புறக்கணிப்பு போராட்டம் என்று தேசபக்தியிலும் ஈடுபாடு. 1931…கோவை என்.சுப்ரமணியன், உபயதுல்லா, சுப்ரிக்கு ஆதரவாக பள்ளி மாணவர்களின் வானரப் படையில் சேர்ந்து உண்டிவில் ஏந்தி மலபார் போலீசாரைத் தாக்க, தடியடியுடன் 11 நாள் சிறை வாசம். தடியடி தந்த பரிசு நெற்றியில் அழியா வடுவாகப் பதிந்தது.
படிப்பில் நாட்டம் குறைந்ததால், 13 ஆவது வயதில் பள்ளிக்கு முழுக்கு போட்டு சுயமாக சம்பாதித்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற உறுதியுடன் ஆயில் இஞ்ஜின் மெக்கானிக், எலக்ட்ரிகல் ஒர்க், சமையல் வேலை, உணவக பரிசகாரர் (திருச்செங்கோடு கிட்டு ஓட்டல்) என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். பழனியில் சித்தப்பா அட்வகேட் சுப்ரமணிய அய்யர் நடத்தி வந்த ஆண்டவன் லாட்ஜில் சிறிது காலம் பணி… இப்படியாக நாட்களை ஓட்டினார்.
எதிலும் பிடிப்பில்லாததால் வீட்டை விட்டு வெளியேறி ‘பித்துக்குளியாய்’ இலக்கின்றி சுற்றித் திரியும் தேசாந்திரி ஆனார். பரிசகாரர் வேலையில் கிடைத்த காசில் பெங்களூர் பயணம். 1936… மைசூர் விதுராங்வத் என்ற இடத்தில் போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் கர்ப்பிணிகள் உட்பட 80 பேர் பலியாக, போராட்டத்தில் குதித்தார். மீண்டும் தடியடி! இம்முறை 6 மாத சிறைவாசம். அன்றாடம் அடியும் உதையும். கஞ்சியில் மிதக்கும் புழுக்கள் கண்டித்து உண்ணாவிரதம். மூக்கின் வழியாய் பாலை விட்டு சித்ரவதை. மைசூர் மகாராஜா சாமராஜ உடையார் திருமணத்தை முன்னிட்டு விடுதலை.
ஏற்கனவே ஒரு விபத்தில் சீழ்பட்டிருந்த விழிகள் தடியடி பிரயோகத்தில் பாழ்பட்டு போயின. டாக்டர் நாராயணராவ் செய்த அறுவை சிகிச்சையும் பலனளிக்கவில்லை. ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கினால்தானே உயர்வு! இவர் தன் ஊனக் கண்ணைக் கொடுத்து ஞானக் கண்ணை வாங்கினார். அருள் ஞான ஒளியைக் கொடுத்த பன்னிரு கண்ணன் இவரது ஒரு கண் ஒளியைக் கவர்ந்து கொண்டான். பெங்களூரில் தமக்கை இல்லத்தில் தங்கியிருந்து கிடைத்த பணிகளை செய்தபடியே தெய்வீக வழியில் பயணம். சுயமாகவே ஹார்மோனியம் இசைக்கக் கற்றுக் கொண்டு ‘ராமா நீயடா இந்த பராக’ போன்ற கிருதிகளை வாசிக்கத் தொடங்கினார்.
1939…தென் கன்னட மாநிலம் கஞ்சங்காடில் சுவாமி ராமதாஸ் அவர்களைச் சந்தித்து உபதேசம் பெற்றார். அங்குதான் மாதா கிருஷ்ணமாயியின் அருளும் கிட்டியது. முருகனை முன்னிருத்திப் பாடும் இவரை சுவாமி ராமதாஸ் தன் வாயால் முருகதாஸ் என்று பெயரிட்டு அழைத்தார். புதிய பொலிவு! அங்கு ஓர் அதிசயம்! ஏற்கனவே ஒரு கண்ணை இழந்த நிலையில் மற்ற கண்ணும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தது.
ஒரு நாள் பஜனையின்போது பெண்மணி ஒருவர் ஆதுரத்துடன் அந்தக் கண்ணை தடவிக் கொடுக்க வலி பறந்தது. புதிய ஒளி பிறந்தது. அவரது வாழ்க்கையில் புதிய திருப்பம். ஆன்மா புடமிடப்பட்டு புதிய பாதையில் தொடங்கியது பயணம்.
1940 – இறுதியில் சேந்தமங்கலம் சுவாமிகள் ஸ்வயம் பிரகாச சுவாமிகளுடன் கழித்தார். தொடர்ந்து பாதயாத்திரை. தீர்த்த யாத்திரையில் பாரதத்தை நடையால் அளந்தார். பல யோகிகளின் நட்புறவை பெற்றார். மகான்களின் இதயத்தை வென்றார். பாரதத்தின் பூகோளப் பரப்பளவை இவரது கால்கள் நன்கறியும். நாமும் பெயரளவில் தெரிந்து கொள்வோம்.
ஓங்கோல், ராஜமுந்திரி, துனி, சிம்மாசலம், பூரி, கொல்கத்தா, பேளூர் மட், அலகாபாத், காசி வழியே ரிஷிகேஷ், ருத்ரப்ரயாக், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ஜோதிர் மட், ஹனுமன் கட், பத்ரி என்று புனிதத் தலங்களை தரிசித்தார்.
1941இல் ரிஷிகேஷுக்கு முன்னால் இருக்கும் வசிஷ்டர் குகை மற்றும் புருஷோத்தமானந்தா குகையில் தங்காமல் பாதயாத்திரையைத் தொடர்ந்தார். போகும் வழியில் குருநாதர் பிரம்மானந்த பரதேசியை சந்தித்தார். அப்போதே அவருக்கு 350 வயது இருக்கும் என்கிறார் முருகதாஸ் அவர்கள். சுமார் 14000 அடி உயரத்தில், பாய்ந்தோடும் கங்கை நதியைப் பார்த்தபடி மணிக் கணக்கில் பாடிக் கொண்டிருக்கும் முருகதாஸ் அவர்களைப் பார்த்த நேபாள மன்னரின் பாதுகாவலர் ஷாம்ஷேர் பகதூர் ராணா, தங்களுடன் அரண்மனைக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
வசிஷ்டர் குகையில் மெய்மறந்து அமர்ந்திருந்த முருகதாசை ஒரு சாது உலுக்கி எழுப்பி, ‘உன் பணி ஆயிரம் உண்டு தெற்கே’ என்று பணிக்க குகைக்கு வெளியே வந்தார். அங்கே காத்திருந்த நேபாள மன்னரின் கூட்டத்துடன் இணைந்து நடந்தார். பிரம்மகுண்டத்தில் இவர் இட்ட கடன்களை மனித காக்கைகளை ஏமாற்றி வானவர் காகங்கள் பெற்றுக் கொள்ள உடனிருந்தோர் இவரது அருமையை உணர்ந்தனர். ருத்ரபிரயாகை 12 மைல் இடைவெளியில் பத்ரிநாத் பிரியும் வழியில் இருக்கிறது. நேராகப் போனால் பத்ரிநாத், இடப்பக்கமாகப் போனால் கேதார்நாத் சேரலாம். ராம்பூர் வழியாக துங்கா நதி சென்று அங்கிருந்து 6ஆவது மைலில் கருடகங்கா மற்றும் ஆதிசங்கரர் தியானம் செய்த ஜோஷியமட் வந்தடைந்தார்.
பின்னர் ஹனுமார் காட், பத்ரிநாத் பயணம். இவருடன் நேபாள மன்னரும் இணைந்து கொண்டார். கார்வார் என்ற இடத்தில் இவர் பிண்டதானம் செய்யும்போது, நாணயங்கள் முழுவதையும் கழுகுகள் வந்து எடுத்துச் சென்றன. சரஸ்வதி நதியைக் கடந்து செல்கையில், பசுதாரா என்னுமிடத்தில் (1941) ஒரு அசரீரி இவரிடம் ‘தமிழ்நாட்டுக்குச் செல்’ என உத்தரவிட்டது.
மதுரா, பிருந்தாவனம், துவாரகை, ஸுனாகாட், கிர்னார் மலை, சோம்நாத், நாசிக், மும்பை, பண்டரிபுரம், பீஜப்பூர், சித்தரூடா மவுனசாமி மடம், தும்கூர், மைசூர் வழியாக தமிழகம் வருவதற்குள் ஆண்டொன்று ஓடிவிட்டது.
தமிழகம் வந்தடைந்ததும் வெள்ளியங்கிரி மலை காட்டில் பல மாதம் ஜபம் செய்து, காய்/கனிகள் மட்டுமே உண்டு பக்தியை மொண்டு! பக்திப் பாடல்களை விண்டு ஞானம் கொண்டார். வெள்ளிமலை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகளிடம் திருப்புகழ், கந்தன் பாமாலை கற்றார். பிரம்மானந்த பரதேசியார் நாத அனுபவமும், அமாவாசைப் பரதேசியார், விளாத்தி குளம் சித்தர், ரமண மகரிஷி, சுவாமி சிவானந்தா போன்ற சித்தர்களின் நட்பும் ஆசியும் இவரைப் புடமிட்ட தங்கமாய் ஒளிபெறச் செய்தது.
1947-இல் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயருடன் பிறந்த பித்துக்குளி முருகதாஸ், தமிழ்க் கடவுளான முருகன் மீது நெஞ்சை உருக்கும் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார். இவரது கணீர் என்ற குரல், ஹார்மோனியத்துடன் இணையும் போது, இரண்டிற்கும் வித்தியாசமே தெரியாத அளவிற்கு இருக்கும். அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு போன்ற பாடல்களைப் பாடி பிரபலப்படுத்தினார். தலையில் காவித்தலைப்பாகை உடுத்தி, முகத்தில் கருப்புக்கண்ணாடி அணிந்து சற்றே வித்தியாசமான முருக பக்தராக காட்சியளித்த பித்துக்குளி முருகதாஸ், முருகன் மீது பல பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். கண்ணன் மீதான பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடிய ‘அலைபாயுதே கண்ணா’ மற்றும் தெய்வம் திரைப்படத்தில் வரும் ‘நாடறியும் நூறு மலை’ பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
1995 இல் டர்பனில் நடந்த உலக ஹிந்து சமய மாநாட்டில் சிறப்புரையாற்றினார். அதில் கலந்துகொண்ட ‘நெல்சன் மண்டேலா’ இவரை, ‘உலகின் மிகச்சிறந்த பக்திப் பாடகர்’ என்று பாராட்டினார். ‘கந்தர் அனுபூதி அனுபவ விரிவுரை’ (இரண்டு பாகங்கள்), ‘கந்தர் அனுபூதி – சுருக்க உரை’, ‘தாசனின் கட்டுரைகள்’, ‘ஆதிபராசக்தியும் அசட்டுச் சிறுவனும்’, ‘The Origin, Midway and End’ போன்ற நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்த இவர், சந்தப்பத்திற்கு ஏற்றவகையில் பாடல்களைப் புனைந்து பாட வல்லவர். தென்னாப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ளார். பித்துக்குளி முருகதாஸ் தியாகராஜர் விருது, 1984இல் தமிழக அரசின் கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்ளிட்ட பல இசை விருதுகளைப் பெற்றுள்ளார். தன்னுடன் கச்சேரிகளில் பக்திப்பாடல்களைப் பாடிய தேவி சரோஜா என்பவரை 1978 இல் தனது அறுபதாவது வயதில் மணந்து கொண்டார். இந்த தம்பதியர் ராதா கல்யாணம் பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆக்கினர்! இவர் 2011இல் காலமானார்.
சிறந்த முருகபக்தராக கருதப்படும் பித்துக்குளி முருகதாஸ், சென்னையைத் தலைமையிடமாக கொண்டு ஸ்ரீ ஜோதிர் மாயா தேவி அறக்கட்டளையைத் தொடங்கினார். தனது பக்தி பாடல் கச்சேரிகளின் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து பல ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் மிக உயரிய சமூகத்தொண்டாற்றி வந்தார். வெகுநாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தீவிர முருகபக்தரான பித்துக்குளி முருகதாஸ், சூரசம்ஹார தினமான 17-11-2015 [செவ்வாய்கிழமை] அன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அதிகாலை முருகப்பெருமான் கழல் அடைந்தார்.
முருகா’ முருகா’ முருகா’ முருகா’