பாட்டி சொன்ன கதை
ஒரு ஏழை, கடும் பசியுடன் திரிந்தான். வழியில் ஒரு மாந்தோப்பு தென்பட்டது. பழங்கள் கண்ணைக் கவரும் வகையில் தொங்கின. தோட்டத்துக்குள் புகுந்து விட்டான் அந்த ஏழை. அது, அரசருக்குரிய தோட்டம் என்பது அவனுக்குத் தெரியாது. பசி வேகம் கண்ணை மறைக்க, கல்லை விட்டெறிந்தான்; பழம் கீழே விழுந்தது. ஆர்வமாக பழத்தைச் சாப்பிட்டான் அவன். ஆனால், வீசி எறிந்த கல், சற்று தூரத்தில், தன் மனைவியருடன் மரத்தடியில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த அரசனின் தலையில் விழுந்தது. நல்ல வேளையாக அரசர் கிரீடத்துடன் இருந்ததால் தப்பித்தார். அவர், அதை பெரிதுபடுத்தவும் இல்லை. ஆனால், அங்கே காவலுக்கு நின்றவர்கள், அரசரிடம் நற்பெயர் பெறுவதற்காக உடனடி நடவடிக்கை எடுத்தனர். பழம் தின்று கொண்டிருந்த ஏழையைப் பிடித்து வந்து அமைச்சரிடம் நிறுத்தினர். அவர், அவனுக்கு மரணதண்டனை விதித்தார். இந்த தகவலை மன்னரிடம் ஓடோடி வந்து சொல்ல, மன்னர் அவனை தன் முன்னால் கொண்டு வரும்படி சொன்னார். அவனை இழுத்து வந்தனர். அவன் கல் வீசியதற்கான காரணம், பசி என்பதை புரிந்து கொண்டார். அவனை விடுவிக்கச் சொன்னார் அரசர். “அமைச்சரே… அறிவே இல்லாத இந்த மரம் கூட ஒரு கனியைக் கொடுத்து, இந்த மனிதனின் பசியைப் போக்கியிருக்கிறது. அறிவுள்ள ஜீவன்களான நாம், நம் நாட்டிலுள்ள இவனைப் போன்ற மக்களின் வறுமையைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இவனை விடுதலை செய்யுங்கள். இனி, ஏழைகளே இந்நாட்டில் இருக்கக்கூடாது. அவர்களைக் கணக்கெடுத்து உரிய பணி கொடுத்து பசியை விரட்டுங்கள்…’ என உத்தரவு போட்டார்.