திருவள்ளுவர் வழிபாடு

திருவள்ளுவர் வழிபாடு
0Shares

திருவள்ளுவர் வழிபாடு

 

கேரளா மாநிலம் கோட்டயம்,இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் திருவள்ளுவர் வழிபாடு உள்ளது.

திருக்குறளை ஓதி சுமார் 60 ஆயிரம் பேர் வள்ளுவரை வணங்குகிறார்கள் திருவள்ளுவர் வழிபாட்டு கட்டிடத்தை ‘ஞானமடம்’ என்கிறார்கள்.

கருவறையில் திருவள்ளுவரின் சிலை அல்லது படம் உள்ளது. வெளியே கல்விளக்குத் தூண். எந்நேரமும் பஞ்சமுக விளக்குகள் எரிகின்றன.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் போல வள்ளுவ மதத்தை கேரளாவில் ஸ்தாபித்திருக்கிறார் இடுக்கியை அடுத்த மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த சிவானந்தர்.

“இவருக்கு மலையாளம்தான் தாய்மொழி இவர் தாய் தந்தை கிறிஸ்தவம் சார்ந்தவர்கள்.
தமிழ் இவருக்கு தெரியாத அந்நிய மொழி”.

‘தமிழ் நமக்கு அம்மா மொழி.
அம்மா மொழியில் வல்லிய கவிதை பாடிய திருவள்ளுவர் ஞானகுரு. திருக்குறள் வேதப்புத்தகம்.
ஞானமடம், நமக்கு தேவாலயம்’ – இதுதான் வள்ளுவ மதத்தின் உள்ளடக்கம்.

‘‘பூப்பாறை தேயிலைத் தோட்டத்தில் 1974ல் வேலை செஞ்சேன். அங்க ஒரு தமிழர் டீக்கடை வச்சிருந்தார். அந்தக் கடையில இயேசு, திருவள்ளுவர், புத்தர் படங்களைப் போட்டு ‘உலகத்தைத் திருத்திய உத்தமர்கள்’னு எழுதி இருந்தது.

எனக்கு இயேசுவையும் புத்தரையும் தெரியும். தாடி மீசையோட உக்கார்ந்திருந்த வள்ளுவரை அதுவரை பார்த்ததில்லை. ஆனா, பார்த்ததும் பெரிய மரியாதை வந்துச்சு. கடைக்காரர்கிட்ட விசாரிச்சேன்.

‘அவரு எங்க நாட்டில பெரிய புலவர். பெயர் திருவள்ளுவர், அவர் எழுதிய திருக்குறள் உலகப் புகழ் பெற்ற புத்தகம்’னு சொன்னார்.

ஆறு மாதமா கடை கடையா அலைஞ்சேன். கடைசியா வெண்ணைக்குளம் நாராயண குரு மலையாளத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகம் கிடைச்சது. ஒரு மாசம் படிச்சேன்.

நான் தேடுன எல்லாமும் அதில் இருந்தது. அப்பவே வள்ளுவர்தான் ஞானகுருன்னு முடிவு பண்ணிட்டேன்.

திருவள்ளுவர் படம் வாங்கினேன். 1975ஆம் ஆண்டு சித்திரை முதல் தேதி, நான் வேலை செஞ்ச சேனாபதி கிராமத்தில் திருவள்ளுவர் படத்தை வச்சு வணங்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வரத் தொடங்கினாங்க’’ என்கிறார் சிவானந்தர்.

வள்ளுவரை ஏற்றுக் கொண்டவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது. மது, புகையிலை பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. பொய், களவு செய்யக்கூடாது.

44 வருடத்தில் திருவள்ளுவர் சாட்சியாக ஏராளமான காதல் திருமணங்கள் நடந்துள்ளன.

ஞானமட திருமணத்தில் தாலி இல்லை. மோதிரம் மாற்றுவதும் இல்லை. மடத்தில் இருக்கும் திருமணப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படும்.

பெற்றோரும் ஞானமடபதியும் வாழ்த்த, இல்லற அதிகாரத்தில் உள்ள திருக்குறள் ஓதப்படும். அவ்வளவே!

இறந்தவர்களை அடக்கம் செய்ய கோயிலில் உடலை வைத்து, நிலையாமை பற்றிய குறள்களை ஓதி, இறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து புதைக்கிறார்கள்.

ஆனால் ஞானமடங்கள் எழும்பத் தொடங்கியபோத மலையாள ஆர்வலர்கள் பலர், ‘தமிழ்நாட்டுக் கவிக்கு கேரளாவில் கோயிலா’ என்று கொதித்தனர்.

எல்லோருக்கும் பதில் சொன்னார் சிவானந்தர். . எதிர்ப்புகள் ஒடுங்கின.

கார்த்திகை மாதம் திருவள்ளுவருக்கு மாலை அணியும் திருநாள் நடக்கிறது. சபரிமலை செல்வது போலவே மாலை அணிந்து, 41 நாள் விரதமிருந்து தலைமை ஞானமடமான கூர்மலைக்கு யாத்திரை செல்கிறார்கள்.

கூர்மலை உச்சியில் பூக்களால் வள்ளுவர் சிலையை அலங்கரித்து வணங்குகிறார்கள்

ஞானமடங்களின் ஆண்டு விழாக்களும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் செண்டை மேளம் முழங்க கொடியேற்றப்படும். பச்சைநிறக் கொடியின் நடுவே சிவப்பு வட்டம். இதுதான் வள்ளுவ மதத்தின் கொடி.

ஆண்கள் திருவள்ளுவரை சுமந்து வர, பெண்கள் பச்சை, சிவப்பு உடை அணிந்து பூக்கள் நிரம்பிய தாம்பாளத்தில் விளக்கேற்றி ஊர்வலமாக வந்து வணங்குவார்கள்.

குறிப்பு :
வள்ளுவரையும், திருக்குறளையும் போற்றி 300க்கும் மேற்பட்ட பாடல்களை மலையாளத்தில் எழுதித் தொகுத்திருக்கிறார்கள்.

💚அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.💚

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *