திருவள்ளுவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்பதனையோ அல்லது எந்த சமயத்தையும் சாராதவர் என்பதனையே அவர் இயற்றிய திருக்குறளில் உள்ள கருத்துக்களைக் கொண்டன்றோ கூறவேண்டும்! அப்படிக் கூறாமல் அவரவர்கள் தங்கள் தங்கள் விருப்பங்களுக்கேற்பக் கூறுவது ஆராய்ச்சியாளர்களுக்கு அழகல்ல.
திருவள்ளுவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்று சிலர் கூறி வருகின்றனர். சமண மதத்தில் உலகம் என்பது ஒருவனால் படைக்கப்பட்டது என்ற கருத்து மிகவும் கடுமையாக மறுக்கப் படுகிறது. உலகம் என்பது எப்பொழுதும் உள்ளது என்றும் அதனைப் படைத்தல் என்பது இல்லை என்றும் அம்மதத்தில் கூறப்படுகிறது. ஆனால் திருவள்ளுவர், திருக்குறளைத் தொடங்கும்போதே,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்று கூறிவிடுகிறார். உலகனைத்தும் ஆதிபகவனால் படைக்கப்பட்டது என்று தெளிவாக இக்குறளில் கூறப்படுகிறது. மற்றொரு குறளில் (1062) இறைவனை `உலகியற்றியான்’ (உலகைப் படைத்தவன்) என்றே குறிப்பிடுகிறார். இப்படி சமண மதத்திற்கு முரணான கருத்தைத் திருவள்ளுவர் கூறுகின்ற படியால், அவர் சமண சமயத்தைச் சார்ந்தவராக இருக்கமுடியாது. மேலும் சமண மதம் என்பது வேதங்களை ஒப்புக்கொள்ளாத அவைதிக மதமாகும். ஆனால் திருவள்ளுவர் வேதங்களை ஒப்புக் கொண்டு பல குறளில் கூறுகின்றார்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் செங்கோல். (543)
`அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை’ என்பது இக்குறளின் மணக்குடவர் உரை.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். (134)
`பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம். ஒழுக்கம் குறையுமாயின் குலம் கெடும்’ என்பது மணக்குடவர் உரை.
அந்தணர்கள் (பிராமணர்கள்) ஆறு தொழில்களை உடையவர்கள் என்ற வைதிக மதத்தில் கூறப்பெறுகின்றது. அதாவது 1. வேதங்களைத் தாங்கள் கற்றல், 2. பிறருக்குக் கற்பித்தல், 3. யாகங்களைத் தாங்கள் செய்தல், 4. பிறருக்கு யாகங்களைச் செய்வித்தல், 5. தானம் வாங்குதல், 6. தானம் கொடுத்தல் என்ற ஆறுவகைத் தொழில்களை உடைவர்கள் அந்தணர்கள் என்ற காரணத்தால் `அறுதொழில் அந்தணர்’ என்றே கூறப்படுவர். இதனையும் திருக்குறளில் கூறுகின்றார்:
ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனில். (560)
`பசுக்கள் தரும் பால் குறையும்; அந்தணர் வேதம் ஓதார்; அரசன் காவானாயின்’ என்பது உரை. இக்குறளில் அந்தணரை `அறுதொழிலோர்’ என்றே வள்ளுவர் குறிப்பிடுகின்றார். `கோ ப்ராம்மணேப்ய: சுபமஸ்து நித்யம்’ என்று கூறுகின்ற வைதிக மதக்கோட்பாடு இங்கே நினைவு கூறத்தக்கது.
வைதிக மதத்தில் பஞ்சமஹா யஜ்ஞம் என்று ஒன்று கடமையாகக் கூறப் பெறுகின்றது. தேவ யஜ்ஞம் (தெய்வ வழிபாடு), பித்ரு யஜ்ஞம் (முன்னோர் வழிபாடு), மநுஷ்ய யஜ்ஞம் (பிறமனிதர்களை உபசரித்தல்), பூத யஜ்ஞம் (பிற உயிரினங்களை உபசரித்தல்), ப்ரம்ம யஜ்ஞம் (வேதங்களை, அல்லது துதிகளை ஓதுதல்) என்று ஐந்து யஜ்ஞங்கள் கடமைகளாகக் கூறப்படுகின்றன.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (43)
தென்புலத்தாராகிய முன்னோர்கள் (பித்ருக்கள்), தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகை இடத்திலும் அறநெறி தவறாமல் போற்றுதல் கடமை என்று இக்குறளில் கூறுகின்றார். இது ஏறக்குறைய பஞ்சமஹா யஜ்ஞத்தைப் போன்றதேயாகும்.
வானுறையும் தெய்வங்களைக் குறித்த பூஜைகளாக யாகங்களைச் செய்வது வைதிக மதத்திலுள்ள ஒரு கோட்பாடாகும். இதனையும் திருவள்ளுவர்,
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (18)
மழை பொழியாவிடில் வானோரான தேவர்களுக்கும் பூசனை நடைபெறாது என்று இக்குறளில் கூறுகின்றார். வானுலகில் தெய்வங்கள் உறைகின்றார்கள் என்பதும் அவர்களுக்கு இவ்வுலகினர் பூசை செய்கிறார்கள் என்பதும் வைதிக மதக் கோட்பாடாகும். அதனை திருவள்ளுவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதனை இக்குறள் மெய்ப்பிக்கிறது. வைதிகமதத்தைச் சார்ந்த புராணங்களுள் தேவர் தலைவனாக இந்திரனைப் பற்றி வரலாறுகள் கூறப்படுகின்றன. இந்திரன் தன்னுடைய புலன்களை அடக்காமல் பெண்பித்தனாய்த் திரிந்தமையால் அவன் முனிவரால் சபிக்கப் பெற்றான் என்பது ஒரு வரலாறு. இதனை வள்ளுவர் ஒரு குறளில் கூறுகின்றார்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி. (25)
ஐம்புலன்களால் வரும் ஆசையை அறுத்தவனுடைய வலிமைக்கு, வானுறையும் தெய்வங்கள் தலைவனான இந்திரனே சாட்சியாவான் என்கிறார். இந்திரன் என்று ஒரு தேவன் உளன் என்றும் அவன் வானுறையும் தெய்வங்க ளுக்குத் தலைவன் என்றும் கூறும் புராணங்களை ஏற்றுக் கொண்டே அன்றோ வள்ளுவர் இப்படிக் கூறுகின்றார்! (இங்கு இந்திரனைப் பழித்துக் கூறியுள்ளார்.)
வானோர் உலகம் (346), தானம், தவம் (19), வினைப் பயன் (37), எழுபிறப்பு (62) போன்ற பல வைதிகமதக் கருத்துக்களைத் திருவள்ளுவர் திருக்குறளில் கூறுகின்றார்.
வைணவ சமயத்தில் உடல் வேறு உயிர் வேறு என்ற கொள்கை கூறப்படுகிறது. இக்கருத்தைக் குறள் பல இடங்களில் கூறுகின்றது.
குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. (338)
கூடு தனியே இருக்க அதனை விட்டுப் பறந்து சென்ற பறவை போன்றது உடலோடு உயிருக்கு உண்டான தொடர்பு என்பது இதன் கருத்து.
புக்கிலமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சிலிருந்த உயிர்க்கு. (340)
உடம்பினுள் தங்கியிருக்கு உயிருக்கு இன்னும் சரியான இடம் அமையவில்லை போலும்! (அதனால்தான் பல பிறவிகளில் பல உடம்புகளில் ஆத்மாக்கள் புகுகின்றன) என்பது இக்குறளின் கருத்து.
`இறைவனுடைய திருவடிகளைப் பற்றுவதே உய்வு பெற வழி’ என்பது வைணவ மதத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். இதனைத் திருவள்ளுவர் திருக்குறளில் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஏழு குறள்களில் இறைவன் திருவடி பற்றுவது பற்றிக் குறிப்பிடுகிறார்.
திருவள்ளுவர் தமது திருக்குறளில் எந்த தெய்வத்தையும் குறிப்பிட்டுக் கூறவில்லை என்று சிலர் கூறுகின்றனர். திருவள்ளுவர் திருக்குறளில் திருமாலை இரண்டு குறள்களில் நேரடியாகவே குறிப்பிடுகின்றார்.
மடியிலா மன்னவன் எய்தும்
அடியளந்தான் தாயதெல்லாம் ஒருங்கு. (610)
அடியால் உலகத்தை அளந்தவன் தாவிய பரப்பையெல்லாம் சோம்பல் இல்லாத அரசன் அடைவான் என்பது இதன் கருத்து. சோம்பல் இல்லாத அரசன் உலகனைத்தையும் அடைவான் என்று கூறினால் போதுமாயிருக்க, அப்படிச் சொல்லாமல், `அடியளந்தான்’ என்று திரிவிக்கிரமனாகிய திருமலை திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிது கொல்
தாமரைக் கண்ணான் உலகு. (1103)
தான் விரும்பும் பெண்ணின் மெல்லிய தோளில் தூங்கும் இன்பத்தை விட தாமரைக் கண்ணானாகிய திருமாலின் உலகம் இனிமையானதோ? என்று காம வசப்பட்டவன் ஒருவன் கூறுவதாக இக்குறள் அமைந்துள்ளது. தாமரைக் கண்ணான் என்று திருமாலைக் கூறி, அவனுடைய உலகமான பரமபதம் என்பது எல்லையற்ற இன்பத்தை அளிப்பது என்பதனையும் இக்குறளில் திருவள்ளுவர் பதிவிட்டிருக்கிறார்.
திருமாலின் மனைவியான திருமகளையும் சில குறள்களில் குறிப்பிடுகின்றார்.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்தோம்புவான் இல். (84)
இனிய முகத்துடன் நல்ல விருந்தினரை உபசரிப்பவன் வீட்டில் செய்யாளாகிய திருமகள் முகமலர்ச்சியுடன் இருப்பாள் என்பது இக்குறளின் கருத்து.
அவ்வித்தழுக்காறுடையானை செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (167)
பொறாமைக்குணமுடையவனைச் செய்யவளான திருமகள் வெறுத்து, தன் தமக்கையான மூதேவியிடம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள் என்பது கருத்து.
மடியுளான் மமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையினாள் (617)
சோம்பலுடையவனிடம் மூதேவி தங்கியிருப்பாள். சோம்பல் இல்லாதவனிடம் திருமகள் தங்கியிருப்பாள் என்பது கருத்து.
திருமகளை மட்டுமேயல்ல, திருமாலின் மற்றொரு பத்தினியான பூமிப்பிராட்டியையும் ஒரு குறளில் குறிப்பிடுகின்றார்.
இலமென்றசையிருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். (1040)
என்னிடம் எதுவும் இல்லை என்று சோம்பியிருப்பவனைக் கண்டால் நிலம் என்னும் நல்லாளாகிய பூமிப்பிராட்டி (ஏளனமாகச்) சிரிப்பாள்.
பிரமன், சிவன், விநாயகன், முருகன் முதலிய எந்த தெய்வத்தையும் நேரடியாகக் குறிப்பிடாத திருவள்ளுவர், திருமாலை `அடியளந்தான்’ என்றும், `தாமரைக் கண்ணான்’ என்றும் குறிப்பிட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் அவனுடைய பத்தினியான திருமகளையும் `செய்யாள்’ என்றும் `செய்யவள்’ என்றும், `தாமரையினாள்’ என்றும் அவனுடைய மற்றொரு பத்தினி யான பூமிப்பிராட்டியை `நிலமென்னும் நல்லாள்’ என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
பொதுவான நீதி நெறி நூலில் தெய்வங்கள் எவரையுமே குறிப்பிடாமல் நீதி நெறியை மட்டும் குறிப்பிட்டுச் செல்லலாம். அல்லது அனைத்து தெய்வங்களின் பெயர்களையுமே கூடக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் அப்படி அல்லாமல் திருமாலையும் திருமகளையும் மட்டுமே திருவள்ளுவர் குறிப்பிட்டிருப்பது கருத்தில் கொள்ளத் தக்கது. பிற தெய்வங்கள் எவரையேனும் குறிப்பிட்டிருப்பதாகக் குறட்பாக்களை எடுத்துக் காட்டினால் ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இருக்கிறேன்.
(சங்ககாலப் புலவர்களில் ஒருவரான ஔவையாரும் தம்முடைய பொதுவான நீதிநெறி நூலான ஆத்திசுவடியில் பிற தெய்வங்கள் எவரையும் குறிப்பிடாதவர், `திருமாலுக்கு அடிமை செய்’ என்று திருமாலை மட்டுமே குறிப்பிட்டுள்ளதும் இங்கே கருத்தில் கொள்ளத் தக்கது.)
சர்ச்சைகளை வளர்ப்பதற்காக இக்கட்டுரையை இங்கு நான் வெளியிடவில்லை. அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு அடிகோல்வதற்கே இதனை வெளியிடுகிறேன்.
திருவள்ளுவர்-அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு
