ஒரு மன்னனுக்கு சொர்க்கம், நரகம் குறித்த பெருத்த சந்தேகம் வந்தது. அதை யாராலும் தீர்க்க முடியவில்லை.
இந்நிலையில், காட்டில் வேட்டையாடச் சென்ற இடத்தில் ஒரு சாமியாரைப் பார்த்தான் மன்னன். இவரிடம் கேட்கலாம் என்று முனிவர் தவம் கலைய காத்திருந்தான். கண் விழித்தார் முனிவர்.
“யார் நீ” என்று கேட்டார்.
“நான் மன்னன்…”
“சரி, சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?”
“நான் ஒரு நாட்டுக்கே மன்னன் என்கிறேன். என்னைப்பார்த்து சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய் என்கிறீரே?”
“எனக்கு உன்னைப் பார்த்தால் திருடனைப்போல் தெரிகிறது” என்றார் முனிவர்,
மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது. “முனிவராயிற்றே என்று பொறுமையாக காத்திருந்து உங்களிடம் ஒரு கேள்வி கேட்க நினைத்தால் என்னையே திருடன் என்கிறீரா.? உம்மை என்ன செய்கிறேன் பார்” என்று வாளை உருவினான் மன்னன்.
முனிவர் சிரித்துக்கொண்டே, “இதுதான் நரகத்துக்குச் செல்லும் வழி!” என்றார்.
மன்னனுக்கு சட்டென்று ஞானம் தோன்றியது. கேள்வி கேட்காமலே தாம் வந்த நோக்கத்தை ஞானதிருஷ்டியால் அறிந்து, பதில் சொல்லிய மகாமுனியாக காட்சி தந்தார் முனிவர்.
வாளை கீழே போட்ட மன்னன், “சுவாமி என்னை மன்னிக்க வேண்டும்!” என்று பணிந்தான்.
“இதுதான் சொர்க்கத்துக்குச் செல்லும் வழி!” என்றார் ஞானி.
சாஷ்டாங்கமாக விழுந்து விட்டான் மன்னன்.
உயர்பதவியில் இருக்கும்போது, எதையும் ஒன்றுக்குப் பத்து முறை யோசித்துப் பேசுவதே சிறப்பானது….