சிருங்கேரீ, ஆச்சாரியரால் எழுதப்பட்ட ஓர் ஸமஸ்கிருத நாடகம்.
பார்வதி நாயகனான சிவன், சிவராத்திரி கழிந்து வேட்டைக்குச்சென்று தனது இருப்பிடமான கைலாசத்திற்கு திரும்புகிறார்.
ஆனால் உமையவள் கையிலாய வாயில் காப்போனிடம் அவரை யாரென்றே தெரியாது என்றும் எனவே கண்டவர்களையும் உள்ளே விட முடியாது என்று சொல் என்றும் அலட்சியமாக சொல்லி அனுப்புகிறாள்.
ஊடல் இருக்காதா பின்னே. வேட்டைக்குப் போய் இரண்டு மூன்று நாள் கழித்து ஆர அமர வந்தால் சிரித்த முகத்தோடு ஆர்த்தியா எடுப்பார்கள்?
போனால போன இடம் வந்தால் வந்த இடம்.
இந்த ஈஸ்வரனுக்கு தன் மனைவி என்றால் கிள்ளுக்கீரையா என்ன?
இன்று அவரை அழ விட்டுதான் உள்ளே விடுவது. இருக்கட்டும் எனக்காச்சு அவருக்காச்சு. பாத்துடலாம் என்று கருவுகிறார் தேவி.
இனிதான் தொடங்குகிறது நாடகம்.
சமஸ்க்ருதத்தில் ஒரே பதத்திற்கு பல அர்த்தங்கள் உண்டல்லவா? அதை வைத்தே வார்த்தை விளையாட்டு நடத்தி ஈசனை மண்டியிட வைக்கிறாள் இமவான் மகள்.
பாவம் தூதுவன் பாடு திண்டாட்டம். வாயிலுக்கும் உள்ளுக்கும் இனி அவன் அலையப்போகும் கொடுமையை கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள்.
“ அப்பா காவல்காரா, நான்தான் ‘ சிவா’ வந்திருக்கிறேன் என்று உன் எஜமானியிடம் சொல்லப்பா”
“அம்மா .. வாசலில் நிற்பவர் ‘ நான்தான் சிவா வந்திருக்கிறேன் உள்ளே விடு என்கிறார்.,”
‘சிவா’ என்றால் நரி என்றாகுமே. நரிக்கு இங்கு என்ன வேலை? போய் காட்டில் உலாவச் சொல். இங்கு கையிலாயத்தில் நரிக்கு இடமில்லை என்று சொல்”
“ஐயா சிவா என்றால் .. நரியாம். நரிக்கு என்ன வேலை கைலாயத்தில் என்கிறார் அம்மை”
அப்பனே, சிவா என்றால் மங்கலமானவன் என்பதுதான் முக்கியமான பொருள் அப்பா. உன் எஜமானி நரி என்று அர்த்தம் பண்ணிக்கொண்டால் என்ன செய்வது?
“சரி பரவாயில்லை. நான்தான் கோபதி வந்திருக்கிறேன் என்று சொல்”
“அம்மையே கோபதி வந்திருக்கிறேன் என்கிறார். “
“கோபதியா? கோ என்றால் பசு. பதி என்றால் தலைவன். கோபதி என்றால் பசுக்களின்தலைவனான ‘எருது’. வயலில் போய் மேயட்டுமே.
எருதுக்கு இடமில்லை இங்கு என்று சொல்”
“ஐயா, கோபதி என்றால் எருது. எருது எங்கேயாவது மேயப் போக வேண்டியதுதானே இங்கு இடமில்லை என்கிறார்..”
“அடடா.. கோபதி என்றால் ஜீவர்களான பசுக்களுக்குபதியாகிய பசுபதி அல்லாவா அர்த்தம்?
போகட்டும் முக்கண்ணன் ( த்ரயக்க்ஷண்) வந்திருக்கிறேன் என்று சொல். “
“உமையே..,முக்கண்ணன்.. த்ரயக்க்ஷண் என்கிறார்”
“தேங்காய்க்குத்தான் மூன்று கண்கள். தேங்காயென்றால் மரத்தின் மேலே போய் உட்காரச்சொல். “
ஐயனே..
“அடேய் சூரியன் சந்திரன் அக்னி என்று மூன்று கண்களை உடையவன் என்பதால்தான் த்ரயக்ஷண்.
சரி சரி அதை விடு ‘கபாலி’வந்திருக்கிறேன் என்று சொல்”
“பரமேஸ்வரி தாயே ‘கபாலி’ என்கிறார்.”
‘கபாலி’என்றால் கையில் பிச்சை பாத்திரம் வைத்திருக்கும் பிச்சைக்காரன் என்றாகிறதே? போய் நாலு வீட்டில் பிச்சை எடுக்கச்சொல். இங்கு பிச்சை போட முடியாது”
பரமேஸ்வரா.. உங்களை அம்மை,பிச்சைக்காரன் என்கிறார். கபாலி என்றால் பிச்சைஓடு கையில் வைத்திருப்பவனாம்.
இது ஏதடா வம்பு? அன்று ஒரு நாள் ப்ரம்மாவின் கர்வம் அடக்க அவரின் ஐந்து தலைகளில் ஒன்றை கிள்ளியதும் அவருடைய கபாலம் என் கையில் ஒட்டிக் கொண்டிருப்பதால் அல்லவோ ‘கபாலி’ என்கிறார்கள்?
சரி ‘ஶ்ரீஹ்ருத்’ நிற்கிறார் என்று சொல்”
“ஶ்ரீ ஹ்ருத் ஆ? ஶ்ரீ என்றால் லக்ஷ்மி ஹ்ருத் என்றால் இதயம். லக்ஷ்மியின் இதயத்தில் இருப்பவர் விஷ்ணு அல்லவோ? விஷ்ணுவிற்கு கைலாயத்தில் என்ன வேலை? வைகுண்டம் போகச்சொல். “
“அப்பனே ஒப்பிலா மணியே உங்களை… “
“காதில் விழுந்தது விழுந்தது.
ஶ்ரீ என்றால் விஷம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. ஆலகால விஷத்தை உடலில் தாங்கிக் கொண்டிருப்பவன் என்பதால் ஶ்ரீஹ்ருத்.
போகட்டும்.
கங்கா ஜீவன ப்ருத் என்று சொல். “
அம்மையே..
“இது என்ன கங்கை என்றால் தண்ணீர் நிறைய உள்ள நதி அல்லவா? கங்கையால் உயிரினங்களை வாழவைப்பவரா? இங்கு இந்த கைலாயத்தில் தண்ணீருக்குப் பஞ்சமில்லை அந்த கங்கையை தண்ணியில்லாக் காட்டில் வைத்து ஜீவனம் பண்ணட்டும் இங்கு வேண்டாம்”
“பொன்னார் மேனியனே.. அம்மை என்ன சொல்கிறார் என்றால் …”
அடேய் கங்கையை தலையில் தரித்திருப்பவன்என்ற பொருளில் கங்காஜீவனப்ருத் என்றால் .. அதை வேறுமாதிரிப் பிரித்து அர்த்தம் பண்ணிக்கொண்டால் என்ன செய்வது?
நல்ல வேளை எனக்கு ஆயிரத்திற்கும் மேலே பெயர்கள் இருப்பதால் இதோ அதில் ஒன்றான
‘சுமனஸ்ஷ்ரேய: ‘ என்பதைச்சொல்
“சுமனஸ என்றால் வாசனையுள்ள மலர்.ஆஷ்ரேய என்றால் பூக்களுக்கு இடம் கொடுக்கும் மரமல்லவா. மரத்தை காட்டில் போய் நிற்கச் சொல் “”“
“வம்புக்கு அர்த்தம் பண்ணினால் என்ன செய்வது?
சுமனஸ என்றால் தேவர்கள் அவர்கள் தஞ்சம் அடைவது ஈஸ்வரனிடம். தேவர்கள் வ்ருத்திராசுரன் திரிபுராசுரர்கள் போன்ற அசுரர்களால் துன்புற்றபோது அவர்கள் என்னைச் சரண் அடைந்து நான் அந்த அசுர்ர்களை சம்ஹாரம் செய்ததால் சுமனஸஷ்ரேயன் என்றானேன்.
திவி சர வர: என்றாவது சொல்.”
“திவி என்றால் ஆகாயம் சர என்றால் சஞ்சரிப்பது வர: என்றால் சிறந்தது.
ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பக்ஷிகளில் சிறந்தது கருடன் அல்லவா?” கருடனை எல்லாம் உள்ளே விட முடியாது”
அப்படியல்ல. தேவர்களும் ஆகாயத்தில் சஞ்சரிப்பதால் அவர்களில் சிறந்தவன் என்பதுதான் முக்கிய அர்த்தம்.
இதோ இன்னொரு பெயர். ‘த்ரிதஷாக்ரி. ‘இதையாவது சரியாகப் புரிந்து கொண்டு என்னை உள்ளே விடச்சொல்லப்பா”
“த்ரி – மூன்று. தசை- பருவம். அக்ரி- மூத்தது
பாலப் பருவம் யௌவனம் முதுமை என்ற பருவங்களில் மூத்தது வயோதிகப் பருவம். கிழவனை வைத்துக் கொண்டு என்னால் திண்டாட முடியாது”
அடக் கடவுளே. தேவர்களுக்கு மூப்பே கிடையாது என்வே பாலம் கௌமாரம் யௌவனம் என்னும் மூன்று பருவத்தில் யௌவனப்பருவத்தினன் என்பதல்லவோ பொருள்.
எப்போதடா முடியும் உன் எஜமானியின் கோபம்?
சரி போகட்டும்
பர்ஹிமுக வர்ய:?
பர்ஹி என்றால் புல். புல்லை வாயில் வைத்திருப்பது மாடு. மாடையெல்லாம் கட்டி மேய்க்க முடியாது
அப்பா காவல் காரா.. பர்ஹி என்பதற்கு அக்னி என்றும் ஒரு பொருள் உண்டு.
யாக யஞ்ஞங்களில் அக்னியின் மூலமாக யஞ்ஞ ஆஹுதிகளை ஏற்றுக் கொள்பவன் என்பதுதானே நியாமான அர்த்தம்.
இதையாவது சொல். சூலி?”
“சூலியா? சூலி என்றால் வயிற்று வலி அல்லவோ?
வயிற்று வலிக்காரனை வைத்தியரிடம் போகச்சொல்”
முடியவில்லையடா!..
என்கையில் இருக்கும் ஆயுங்களில் சூலம் என்பது முக்கியமானது. அதை தரித்திருப்தால் அல்லவோ சூலி என்ற பெயர் எனக்கு?
ஸ்தாணு என்ற பெயராவது தேவிக்கு புரிகிறதா என்று கேட்டு வா
“ஸ்தாணு என்றால் பட்ட கட்டையல்லவா?
காய்த்து பட்டுப் போன கட்டையால் என்ன உபயோகம் எனக்கு?”
ஸ்தாணு என்றால் எதற்க்கும்கலங்காத அசையாத ஸ்திரமானவன் லிங்க ரூபன் என்றுதானே அப்பா இந்த உலகம் என்னைப்புகழ்கிறது?
பட்ட கட்டை என்று என்னை சொல்வது நன்றாகவா இருக்கறது?
“சரி நீலகண்டன் என்ற என் பெயர் உலகப் ப்ரசித்தம். அதுவாவது உன் அம்மாளுக்கு புரிகிறதா என்று கேளப்பா”
நீல கண்டம் என்றால் மயிலுக்குத்தானே நீலக்கழுத்து? மயில் மழை வந்தால் காட்டில் போய் தோகை விரித்து ஆடிக் கொண்டிருக்கட்டும் கயிலையில் வந்து மயிலாட வேண்டாம் போகச்சொல்.
தேவி உமையே கற்பகமே கரும்பே ., சமஸ்க்ருதத்தில் வார்த்தையில் விளையாடினால் நேரமே போதாது.
வேட்டையாடி மிகவும் களைத்து வந்திருக்கிறேன் தயவு செய்து கதவைத் திறந்து என்னை உள்ளே விடு.
போதும் இந்த ஊடல்.
“அவர் ஈஸ்வரன்தான் என்பதற்கு ஏதாவது அடையாளம் இருக்கிறதா? அதைச் சொன்னால் உள்ளே விடுவேன் என்று சொல்”
“பெருமானே.. அன்னை நீங்கள்தான் இந்த உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனான ஈஸ்வரன் என்பதற்கு அடையாளம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்கிறார் ஐயனே”
மறைகளும் தேடும் எனக்கேதப்பா அடையாளம்? ஆனாலும் இதோ இந்த மோதிரத்தைக் காண்பி. “
( மோதிரத்தைக் கழட்டும் பாவனையில் அர்ச்சா மூர்த்தியிடமிருந்து மோதிரம் எடுத்துச்செல்லப்படுகிறது)
அதைப் பார்த்ததும் உலகெலாம் ஈன்ற அன்னை முகம் ஊடல் தீர்ந்து கூடலை எண்ணி நாணுவது போல மெல்ல வெட்கத்தில் சிவக்கிறது.
வாயில்காப்போனே!
போனால்போகிறது. கதவைத்திறந்துவிடடா காவல் காரா!!
இதன் பிறகு அம்மையும் ஐயனும் ஒன்றாக அருகருகே அமர்ந்து காட்சி அளித்து இந்த ஊடல் நாடகத்தைப் பார்த்த நமக்கு அருளை வாரி வழங்குகிறார்கள் கண்கொள்ளாகாட்சி அது.
காவல்காரனோ இந்த நாடகத்தில் கால் தேய நடந்து ஓய்ந்தாலும் அதன் ஹாஸ்யபாவத்தை ரசித்தபடி “ இந்த ஊடல் நாடகத்தை பார்த்தவரும் கேட்டவரும் ஆகிய கணவன் மனைவிகள் இனி அன்யோன்யமாக இருப்பார்கள் என்று வாழ்த்தி விடை பெறுகிறான்.
நாமும் நமது கவலைகளை மறந்து அரைமணிநேரமாக உலகிற்கெல்லாம் தாயும் தந்தையுமான ஈசனுக்கும் தேவிக்கும் இடையே நமக்காக நடந்த ஊடலை கண்டு வாய்விட்டுச்சிரித்துக்கொண்டு “வேணும் இந்த சிவனுக்கு” என்றும், தேவியின் அறிவாற்றலை வியந்தும் அவள் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்று அவளைப் பாராட்டிக்கொண்டும் கலைகிறோம்.
வாழியவே பல்லாண்டு காலம் இந்தக்கதையைப் படித்தவரும் கேட்டவரும் வாழியவே.
சிவசக்தி அருள் என்றும் பரிபூர்ணம்.