சாண்டோ M.M.A. சின்னப்பா தேவர்.
போன நூற்றாண்டு அறுபதுகளில் திரை வானில் தனக்கென்று உச்சமாய் யாரும் தொடமுடியாத உயரத்தில் இருந்து தமிழ்ப் படங்களை தனித் தமிழராய் உற்சாகமாக கொடுத்துக் கொண்டிருந்தவர் தன, இந்த சாண்டோ. சின்னப்பா தேவர். பொதுவாக எந்தத்துறையிலும், பொறுப்பான சான்றோர் தாங்களே முழு பொறுப்பிற்கு காரணமாயினும் தங்களை வெகுவாக முன்னிலைப் படுத்திக்க மாட்டார்கள். அந்த வரிசையில் திரையில் முதல் வரிசையில் திகழ்ந்தவர் இவரே. இவர் பொதுவாக குடும்பக் கதைகளை சற்று துப்பறியும் விதமான கோணத்தில் அமைத்துக் கொள்வார்.
கதாநாயகன் ஒருவனே எல்லாவழியிலும் சிறந்தவனாய் இருந்து போராடி ஜெயிக்கணும். அவனுக்கு வில்லன் நிறைய இருக்கவேண்டும். அந்தக் கூட்டத்திற்கு அடியாளாய் இறுதியில் இவர் 3 காட்சிகளுக்கு வந்து செல்வார். பாடல் கதை சற்று கிராமம் தழுவி பின்னர் புதுமையில் புக வேண்டும். இதுதான் அவர் படங்கள் வெற்றி அடைந்ததற்கான ரசக்கலவை. இசை கே.வி. மகாதேவன். காலம் தோறும் வாழும் பாடல்களை அள்ளித் தந்துள்ளார். தாய்க்குப் பின் தாரம் முன்னதாக வந்த படம் என்றாலும் எனக்கு விபரம் தெரிய தாய் சொல்லைத் தட்டாதே படம் தீபாவளி வெளியீடு. விளம்பரம், முதன் முதலில் , முதல் காட்சிக்கு டிக்கெட் எடுப்பவர் கண்ணாடிக் கூண்டை உடைத்துக்கொண்டு கை நீட்டி வாங்குபவர்க்கு தங்கமோதிரம் …திரை உலகில் முதன் முறையாக பரிசளிக்கப் பட்டது. இவர்படங்களுக்கு முதல் முத்திரைச் சின்னமாய் காளை மாடு முட்டுதல் போன்ற முகம் ஜோராக இருக்கும். அது வரவுமே அரங்கனிலுள்ளே கேட்கும் சீழ்க்கை ஒலி இன்றைக்கும் காதுல ஒலிக்குது. இது அவரது எல்லாப் படங்களுக்கும் தொடர்ந்தது.
படத்தில், காடு, மிருகம் இவர்களைத் தள்ளாது எப்படியெல்லாம் மனிதன் வாழலாம் என்ற அமைப்பிலே கதை செல்லும். எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி ஜோடிப் பொருத்தமாய், மகாதேவன் இசையில் மட்டும் சுமார் 25 படங்களுக்கு மேல் எடுத்திருப்பார். சிரித்து சிரித்து சிறையிலிட்டாய் பாட்டு தொடக்கம், காவேரிக் கரை….என்றெல்லாம் வளர்ந்து … தெய்வம் படத்தில் பல பக்தி பாடல் கண்டு..,..அன்னை ஓர் ஆலயத்திலும் …அம்மா நீ சுமந்த பிள்ளை…… எல்லாப் பாடல்களும் வெற்றி கண்டவைதாம்.
தானா வரிசையில், தாய்க்குப்பின் தாரம், தாய் சொல்லைத்தட்டாதே, தாயைக்காத்த தனயன் தொடர்ந்து தெய்வம் வரை தொடர் வெற்றி தான். இடையில் காளைச் சின்னம் யானைக்கு மாறியது. குடும்பத் தலைவனில் மாட்டு வண்டி பந்தயம் காட்டி அதில் கதாநாயகன் வெற்றி பெற்று அறிமுகமாவார். இவரே வாழ்க்கையில் சாண்டோதானே… அந்த ரசனை துளியும் குறையாமல் தனது படத்தில் காட்டியிருப்பார். தாயைக் காத்த தனயனில்…எம்.ஜி.ஆர். புலியிடம் சிக்கும் காட்சி பெருமையாக அன்று பேசப் பட்டது. எஸ். எ. அசோகன் இவர் படத்தில் வில்லனாக, பின்னர் திருந்தபவராக இருப்பார்.. தெய்வச் செயல் படம் இவர் படம் என்று நினைக்கிறேன். அதில் அசோகன் கதாநாயகன்…நாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கும். ஹிந்தியில் யானையை வைத்து இவர் எடுத்த..ஹாத்தி மேரா சாத்தி வெற்றியானதும் …தமிழில் நல்ல நேரம் எடுத்தார் என்பது பலர் அறியாத விஷயம். ரஜினியை வைத்து அன்னை ஓர் ஆலயம். நீதிக்குப் பின் பாசம் படம் ஒன்றே கதையில் நல்ல சாராம்சம் உள்ளதாய் வந்தது. கண்ணாம்பா, ரங்கராவ் , பொதுவாக இவர்படங்களில் பெற்றவர்களாய் இருப்பார்.. எம். ஆர். ராதாவும் பல பெரும்பாலான படங்களில் திட்டமிடும் வில்லனாக வருவார். இவர்படங்கலிலே வில்லன்கள் பெரும்பாலும் திருந்திவிடுவதாய் இருப்பார். பழிக்குப்பழியில் கதை சென்றாலும் நேர்வழியில் திரும்பிவிடும்.
இவர் தனிப்பட்ட வாழ்வில் ஒரு பெரிய முருக பக்தர். எந்தநேரமும் தனது வெற்றுடம்பில் சந் தனம் பூசியே காணப்படுவார். கோவையில் மருதமலை இவராலேயே வெளி உலகுக்கு தெரிந்து பிரபலமானது. அதனால்தானோ என்னவோ இவர் தெய்வம் படத்தில் அறுபடை வீடுகளில் பழமுதிர்ச்சோலையை விடுத்து மருதமலையை நுழைத்தார். எல்லாப் பிரபல பக்தி பாடகர்களையும்…குறிப்பாய் மதுரை சோமு, பித்துக்குளி முருகதாஸ், பெங்களூர் ரமணியம்மாள்…பாடவைத்ததொடல்லாமல்….கிருபானந்த வாரியாரையும் கதை சொல்ல வைத்து,
அந்தந்த படைவீட்டில் காணும் திருவிழாக்களைக் காண்பித்து ஒரு சாதாரண முருகபக்தராய்
பெரும் புண்ணியம் தேடிக் கொண்டவர் இவர் ஒருவரே என்றால் மிகையாகாது.