சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!
0Shares

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!

தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையிலான குருசேத்திரப் போர் முடிந்து விட்டது. பலம் பொருந்திய பலர் பலியாகி விட்ட போதிலும், தர்மம் வெற்றி பெற்றதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. யுத்தம் முடிந்து யுதிஷ்டிரர் மன்னனாக முடிசூட்டப்பட்டு விட்டார். இதையடுத்து பாண்டவர்களுக்கு பக்கபலமாக நின்று போரிட்ட பலரும் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். எல்லா காரியங்களையும் தன் கண் அசைவிலேயே நடத்தி முடித்து விட்ட கண்ணனும் கூட துவாரகைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

புறப்படும் சமயத்தில் அவர், தன்னுடைய அத்தை குந்தியை சந்தித்து ஆசிபெற்றார். அப்போது குந்திதேவி, “கண்ணா.. எங்களை விட்டுச் செல்கிறாயா?. உன்னைத் தினமும் பார்க்கும் பாக்கியம் எனக்கு இனி கிடைக்காதே” என்று வருந்தினாள்.

இந்த உலகத்தில் எதுவுமே நிலையானது கிடையாது. பிரிந்தவர்கள் சேர்வதும், சேர்ந்திருப்பவர்கள் பிரிவதும் கூட அப்படிப்பட்டதுதான். அதனால் உன்னுடைய வருத்தம் தேவையற்றது அத்தை. உனக்கு ஒரு வரம் தர தயாராக இருக்கிறேன். என்ன வரம் வேண்டுமானாலும் கேட்டு பெற்றுக்கொள்” என்றான் கண்ணன்.

அந்த நேரத்தில் பாண்டவர்கள், திரவுபதி ஆகியோரும் அங்கேதான் இருந்தார்கள். அவர்களுக்கு, குந்தி என்ன வரம் கேட்கப் போகிறார் என்பது பற்றிய ஆர்வம் இருந்தது, அனைவர் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது. தன் பிள்ளைகளின் வாழ்வும், தன்னுடைய இறுதிக் காலமும் நலமாக இருக்க வேண்டும் என்று கேட்பார் என்பதே அனைவரின் கணிப்பாக இருந்தது.

ஆனால் குந்தி கேட்ட வரம், அவர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ‘எனக்கு தினமும் ஏதாவது ஒரு துன்பத்தை தர வேண்டும்’ என்று குந்தி கேட்டதை கண்டு, பாண்டவர்கள் அனைவரும் தன் தாய்க்கு புத்தி சுவாதீனம் சரியில்லாமல் போய்விட்டதா? என்று கூட கருதியிருப்பார்கள்.

ஆனால் கண்ணனுக்கு மட்டுமே தெரியும், குந்தி ஏன் அப்படியொரு வரத்தைக் கேட்டாள் என்று.. அது பாண்டவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக, “என்ன அத்தை சொல்கிறாய்..? எல்லாரும் இன்பமாக வாழ வரம் கேட்பார்கள். நீ என்ன தினம் ஒரு துன்பம் வேண்டும் என்று வரம் கேட்கிறாய்?” என்று ஆச்சரியப்பட்டவாறே கேட்டான் மாயகண்ணன்.

“கண்ணா.. இதுநாள் வரையிலும் எனக்கு எப்போது துன்பம் நேர்ந்தாலும், நான் உன்னைத்தான் நினைத்துக் கொள்வேன். யுத்தம் காரணமாக இதுவரை நீ என்னுடன் இருந்தாய். உன்னைப் பார்த்துக் கொண்டிருந்ததிலேயே என் துன்பங்கள் எல்லாம் விலகிவிட்டன. இப்போது நீ என்னை விட்டு நீங்கிச் செல்வதாக சொல்கிறாய். ஆகையால் நான் உன்னை நினைக்காமல் இருந்துவிடக்கூடாதே என்ற எண்ணம் என்னை அச்சுறுத்துகிறது. தினமும் ஏதாவது துன்பம் வந்தால், அதன் வாயிலாக உன்னை நினைத்து ஆறுதல்பட்டுக் கொள்வேன். உன்னை நினைப்பதால், உன் அருட்பார்வை எனக்கு கிடைக்கும் அல்லவா? அதற்காகத்தான் எனக்கு துன்பத்தையே வரமாக கொடு என்று கேட்கிறேன்” என்று விளக்கம் அளித்தாள் குந்திதேவி.

பொதுவாகவே இன்பத்தில் இருக்கும் எவரும், இறைவனை நினைக்காமல் சுலபமாக மறந்து விடுவதுதான் வாடிக்கை. ஆனால் துன்பம் என்ற ஒன்று இருப்பதால்தான், அவ்வப்போது மக்கள் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். ஆனால் ,தன்னை அனைவரும் நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் துன்பத்தைத் தருகிறான் என்று நினைத்தால், அதுவும் மனிதர்களின் அறியாமைதான். ஏனெனில் அதன் வாயிலாக இறைவன் நமக்கு சொல்லித்தருவது, வாழ்க்கைக்கான.. ஆன்மாவின் முதிர்ச்சிக்கான பாடம்.

ஒவ்வொரு துன்பத்தின் போதும், ஒரு அனுபவத்தையும், சோதனைகளை வெற்றி கொள்ளும் சூட்சுமத்தையும் மனிதன் அறிந்து கொள்கிறான். அதோடு இறை வழிபாடும் இணையும்போது அந்த துன்பம், இன்பத்தை அளிப்பதாக மாறுகிறது.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *