கோவிந்தனின் இருக்கை
பக்தன் : கிருஷ்ணா, என்னவாயிற்று. சௌகரியம் இல்லாமல் இருப்பது போல் காண்கிறாய்
கிருஷ்ணா : ஆம். உன் மனதில் அமர்ந்து இருக்கிறேன். இடம் சௌகரியமாக இல்லை.
பக்தன் : ஏன் அவ்வாறு கூறுகிறாய்
கிருஷ்ணா : என்னவென்று சொல்வது. என்னை தவிர்த்து ஆயிரம் விஷயங்களை சேகரித்து வைத்து இருக்கிறாய். அவைகளையும் மீறி உட்கார வேண்டியதாக இருக்கிறதே
பக்தன் கண்களில் குளம்.
கிருஷ்ணா : என்னவாயிற்று. ஏன் அழுகிறாய்
பக்தன் : என் மனதில் சௌகரியம் இல்லாமல் இருக்கிறாய். என்னால் “அந்த அழுக்கில் இருக்காதே. சென்று விடு” என்று கூறவும் முடியவில்லை. “இரு” என்று சுயநலமாகவும் கூற முடியவில்லை.
கிருஷ்ணா (சிரித்து கொண்டே) : நீ போ என்று சொன்னாலும் நான் அங்கேயேதான் இருப்பேன். உன்னை விட்டு எக்காரணம் கொண்டும் அகல மாட்டேன். நீ என் சொத்து அல்லவா. ஆனால் ஒன்று
பக்தன் : சொல் கிருஷ்ணா
கிருஷ்ணா : உன் மனதில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் வரை நான் ஓய மாட்டேன். அது வரை உனக்கு சோதனைகள் தரவும் தயங்க மாட்டேன்
பக்தன் : சித்தமாக உள்ளேன். நீ என் மனதில் சந்தோஷமாக ஆனந்தமாக சௌகரியமாக இருக்கும் வரை நீ என்ன சோதனை வேண்டுமென்றாலும் தா.
லட்சுமி தேவி : அதெல்லாம் அனுமதிக்க மாட்டேன் ஸ்வாமி. என் பக்தன் சோதனைகள் அனுபவிப்பதா? அவன் மனதில் இருக்கும் அழுக்குகளை என் அன்பால் அழித்து விடுவேன். தங்களின் நாமத்தை அவ்வப்போது அவனை கூறும்படி செய்வேன். அவன் மனம் இன்னும் சுத்தமாகும். சோதனைகள் அனுபவித்தாலும் அதன் வலியை குறைப்பேன். அதே நேரத்தில் அவன் தவறை உணர வைத்து அவன் அழுக்குகளை நீக்கி தங்கள் பக்கம் அவனை திருப்புவேன்
பக்தன் : தாயே. கருணை உடையவளே. தங்கள் இருவரின் கருணை யாருக்கு வரும்.