“குசேலோபாக்யானம்”
ஸாந்தீபனி முனிவரிடம் கண்ணனும், சுதாமா (குசேலர்) என்ற பிராமணரும் ஒன்றாக குருகுலம் பயின்றார்கள்.
கிருஹஸ்தனான அவர் கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி பூண்டிருந்ததால், செல்வங்களில் பற்றற்றவராய்ப் புலன்களை அடக்கி, தன்னுடைய நாட்களைக் கழித்தார்.
அவருடைய மனைவியும் அவரைப் போன்ற குணங்கள் உள்ளவளாய் இருந்தாள்.
வறுமையில் குழந்தைகளைப் பேண முடியாததால், ஒரு நாள் அவள் தன் கணவரிடம், லக்ஷ்மீபதியான கிருஷ்ணர் உங்கள் நண்பரல்லவா?
வாழ்வதற்குப் பொருளைப் பெற ஏன் அவரை அணுகக்கூடாது? என்று கேட்டாள்.
பசியின் துன்பத்தாலேயே அவள் அவ்வாறு கூறினாள்.
செல்வம் கர்வத்தை உண்டாக்கி வாழ்க்கையைக் குலைக்கும் என்று குசேலர் உணர்ந்திருந்தாலும், கண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால், தனது வஸ்திரத்தின் நுனியில் மூன்று பிடி அவலை முடிந்துகொண்டு, காணிக்கையாய் எடுத்துச் சென்றார்.
கிருஷ்ணர் இருக்கும் துவாரகா நகரத்தை அடைந்தார்.
கிருஷ்ணனுடைய மாளிகைக்குள் நுழைந்ததும் வைகுண்டத்தில் இருப்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தார்.
பகவான் கிருஷ்ணர், அவரை வரவேற்று உபசரித்ததும் விளக்கமுடியாத ஆனந்தமடைந்தார்.
கிருஷ்ணர், அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு குருகுலத்தில் நடந்த பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
குருபத்தினிக்கு விறகு கொண்டு வர காட்டுக்குச் சென்றபோது மழையில் நனைந்ததைப் பற்றிப் பேசினார்..
கொண்டு வந்த அவலைக் கொடுக்க வெட்கப்பட்டுத் தயங்கிய குசேலரிடமிருந்து கட்டாயப்படுத்தி அவலை வாங்கி ஒரு பிடியை உண்டார்.
இரண்டாவது பிடியை எடுத்ததும், “போதும், போதும்” என்று மகாலக்ஷ்மியான ருக்மிணி கிருஷ்ணருடைய கையைப் பிடித்துத் தடுத்தாள். (இதற்குமேல் உண்டால் கொடுப்பதற்குப் பொருள் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்).
பக்தர்களுக்கு அடியவனான கிருஷ்ணர், குசேலரை மிகவும் உபசரித்தார்.
குசேலர், மிகவும் மகிழ்ச்சியுடன் அன்று இரவு கிருஷ்ணருடன் தங்கினார்.
மறுநாள் பொருள் எதுவும் பெறாமல் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார்.
” பொருள் வேண்டும் என்று கேட்டிருந்தால் கிருஷ்ணன் கொடுத்திருப்பார்.
மனைவியிடம் எவ்வாறு சொல்வது?” என்று வழிநெடுக யோசித்துக் கொண்டே சென்றார்.
அவரது மனம் முழுக்க பகவான் கிருஷ்ணருடைய புன்னகையும், பேச்சுக்களும் நிறைந்திருந்தது.
அப்போது அவர் பிரகாசம் மிக்க ரத்தினங்களால் விளங்கும் ஒரு மாளிகையை அடைந்தார்.
க்ஷணநேரம் வழி தவறி வந்து விட்டோமோ என்று திகைத்து, பின்னர் வீட்டினுள் நுழைந்தார்.
உள்ளே தோழிகள் சூழ, ரத்தினங்களாலும்,தங்கத்தினாலும் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கும் தன் மனைவியைக் கண்டார்.
கிருஷ்ணனுடைய கருணை மிக அற்புதமானது, ஆச்சர்யமானது என்று அறிந்தார்.
ரத்னமயமான மாளிகையில் வசித்துக் கொண்டு இருந்தாலும் அவர் கண்ணனிடமே மனதைச் செலுத்தி மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தார்.
இந்த குசேலர் தின நாளன்று
கோவணம் அளவிற்கு ஒரு சிறிய சிவப்பு வஸ்திரம் (கண்ணனின் கௌபீனம் என்று ஐதீகம்) மடித்து வைத்து , அதில் அவல், வெல்லம் வைத்து வழிபடுவார்கள்.
பிறகு அந்த அவலை சிறிது சிறிதாக கிழித்துக் (சிறிய மூட்டையைப் போல்) கட்டி அனைவருக்கும் விநியோகம் செய்வார்கள்.
எனவே நாளை மார்கழி மாத முதல் புதன் கிழமை(22-12-21)
குசேலர் தின நாளன்று ஒரு கோவணம் அளவிற்கு ஒரு சிறிய சிவப்பு வஸ்திரத்தை மடித்து வைத்து , அதில்
அவல், வெல்லம் வைத்து படைத்து,இந்த கதையைப் படித்து, பிறகு சிவப்பு வஸ்திரத்தை சிறிது சிறிதாக கிழித்து அந்த அவலையும் வெல்லத்தையும் அவற்றில் வைத்து (சிறிய மூட்டையைப் போல்) கட்டி அனைவருக்கும் விநியோகம் செய்தால் பக்தர்களுடைய விருப்பத்தை அந்த குருவாயூரப்பன் நிச்சயம் நிறைவேற்றுவான்.
அது சரி, அதென்ன சிவப்பு வஸ்திரம்? அதுவும் கண்ணனின் கௌபீனமா?
இதைப்பற்றிய குருவாயூரப்பனின் லீலைகளில் ஒன்றான கதையை தெரிந்து கொள்வோமா?
முன்னொரு சமயம் ஒரு வயதான மூதாட்டி இருந்தாள்.
அவள் குருவாயூர்க் கண்ணனின் தீவிர பக்தை.
அவள்,ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் குருவாயூரப்பனின் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்து, மனமுருக வழிபடுவது வழக்கம்.
ஒரு நாள் “சீவேலி” தரிசனம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பெருங்காற்றுடன் கனமழை பெய்தது.
அந்த நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது.
இருட்டில் வழி தவறிவிட்டது. மிகுந்த கவலையோடு, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தாள்.
அப்போது, ஒரு சிறிய பையன் அவள் முன் தோன்றி, “ பாட்டி, கவலைப் படாதீர்கள்,உங்களை நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்” என்று சொன்னான்.
மழையில் இருவரும் தெப்பமாக நனைந்து விட்டனர்.
பேசிக் கொண்டே பாட்டியின் வீட்டை அடைந்தார்கள்.
வீட்டை அடைந்ததும் அந்த சிறுவனுக்கு நன்றி சொல்லி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டாள்.
அதற்கு அவன் ‘கோபாலன்’ என்று சொன்னான்.
மூதாட்டி, “ நீ செய்திருக்கும் உதவிக்கு உனக்கு ஏதாவது நான் தர வேண்டும், என்ன வேண்டும்? கேள்” என்று சொன்னாள்.
அவனும், “ மழையில் என் துணி நனைந்துவிட்டது.
எனக்கு உம்முடைய புடவையிலிருந்து ஒரு கௌபீனம் தாருங்கள் போதும்” என்று கூறினான்.
அவள் சுற்றிப் பார்த்த பொழுது ஒரு சிவப்புப் புடவை இருந்தது.
அதிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கிழித்து அவனிடம் கொடுத்தாள். அவனும் பெற்றுக் கொண்டு சென்றான்.
அடுத்த நாள் காலை, நிர்மால்ய தரிசனத்திற்காக ஸன்னிதியின் கதவைத் திறந்தபோது, மூர்த்திக்கு சிவப்பு வர்ணக் கௌபீனம் கட்டியிருப்பதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.
முதல் நாள் நன்கு அலங்காரம் செய்யப்பட்ட கண்ணன் இப்போது எப்படி கௌபீனத்தோடு காட்சி அளிக்கிறான்? என்று ஆச்சர்யமடைந்தனர்..
கண்ணனின் திவ்ய மேனி அனைவரையும் மயக்கும் வண்ணம் இருந்தது.
வழக்கம்போல் தரிசனத்திற்காக வந்திருந்த மூதாட்டியும் மகிழ்ந்து அனைவரிடமும் முந்தைய நாள் நடந்தவற்றைச் சொன்னாள்.
தன்னுடைய சிறிது கிழிந்த புடவையையும் காண்பித்தாள்.
அதன் கிழிந்த பகுதி, குருவாயூரப்பனின் கௌபீனமாக இருப்பதைக் கண்ட அனைவரும் வியந்தனர்.
மூதாட்டி, இந்த தெய்வீக நாடகத்தையும், குருவாயூரப்பன் தனக்கு அனுக்ரஹம் செய்ததையும் எண்ணியெண்ணி ஆனந்தித்தாள்.
அன்று முதல் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இரவில் சிவப்புக் கௌபீனம் சாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.
நன்றி:andavantiruvadi.blogspot.comகுசேலர் தினம்,மற்றும் சிவப்புக் கௌபீனம் பற்றிய தகவல்கள் மேல்கண்ட இணைய தள முகவரியிலிருந்து பெறப்பட்டது.