தெரிந்த கதை தெரியாத வரலாறு.
கிருஷ்ணருக்கும் ருக்மணிக்கும் பிறந்த பிரத்யும்னன் கதை
திருமணம் எவ்வாறு நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கு வம்சவிருத்தி எவ்வாறு உண்டானது என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போம!??
விதர்ப்ப தேசத்தை பீஷ்மகன் என்பவன் ஆட்சி செய்து வந்தான் .அவனுக்கு ருக்மி என்ற மகனும் ருக்மணி என்ற மகளும் இருந்தனர்.ருக்மணியும் கிருஷ்ணரும் காதல் கொண்டனர் .ஆனால் இது ருக்மணியின் சகோதரன் ருக்மிக்கு பிடிக்காத காரணத்தால் தன் தங்கையை சிசுபாலனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து தந்தையிடமும் சம்மதம் வாங்கி விட்டார். மேலும் எல்லா நாட்டிற்கும் திருமண ஓலை அனுப்பினான் .ஜராசந்தன் பவுண்டரகன் முதலியோரையும் அழைத்தான். ஆனால் திருமணத்தன்று கிருஷ்ணர் ருக்மணியை கவர்ந்து சென்றார்.வழியில் ருக்மி அவருடன் போரிட ருக்மியை வீழ்த்தி கிருஷ்ணன் துவாரகை சென்று ருக்மணியை திருமணம் செய்து கொண்டார் .இது வரை அனைவரும் அறிந்ததே இனி.
சிறிது காலத்தில் மன்மதனை ஒத்த அழகுடன் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள் ருக்மணி. அவனுக்கு #பிரத்யும்னன் என்று பெயரிட்டனர். அக்காலத்தில் சம்பாசுரன் என்னும் ஒரு அசுரன் இருந்தான். அவனுக்கு கிருஷ்ணருக்கும் ருக்மணிக்கும் பிறக்கும் மகனால் தான் சாவு என்று ஒரு வரம் உள்ளதை அறிந்து ருக்மணிக்கு பிறந்த பிரத்யும்னனை மாய வடிவில் துவாரகைக்குச் சென்று யாரும் அறியாமல் ஆறே நாளான பிறந்த சிசுவை தூக்கி வந்து கடலில் எறிந்து விட்டு ஓடிவிட்டான். கடலில் எறிந்த பிரத்யும்னனை மீனொன்று விழுங்கியது.
ஒருநாள் செம்படவர்கள் மீன் பிடிக்க வலை வீசிய போது குழந்தையை விழுங்கிய மீனும் அவர்கள் வலையில் சிக்கியது. அவர்கள் அந்த மீனை சம்பராசுரன் அரண்மனைக்கு சாப்பாட்டுக்காக கொண்டுவந்தனர். அப்போது அங்கு சமையல் வேலையில் ஈடுபட்ட மாயாவதி என்ற பெண் ஒவ்வொரு மீனாக நறுக்கும் பொழுது ஒரு மீனின் வயிற்றில் அங்கும் இங்கும் அசையவே அதை பக்குவமாக அறுத்து அதற்குள் உயிரோடு இருக்கும் பிரத்யும்னனை கண்டு ஆச்சரியப் பட்டாள்.
குழந்தை எவ்வாறு மீனின் வயிற்றுக்குள் வந்தது என்று அவள் ஆச்சரியப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது நாரத மகரிஷி அவள் முன் தோன்றி இந்த குழந்தை கிருஷ்ணரின் குழந்தை .இவனுக்கு பிரத்யும்னன் என்று பெயர். சம்பாசுரனுக்கு எமனாக இவன் வந்திருக்கிறான். ஆகவே இவனை பத்திரமாக வளர்த்து வா என்று கூறி விட்டு மறைந்தார்.
மாயாவதியும் நாரதர் கூறியதைக் கேட்ட திலிருந்து பிரத்யும்னனை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள் .ஒரு நாள் பிரத்யும்னன் பருவ வயதை அடைந்தவுடன் அவனிடம் பிரத்யும்னா நீ கிருஷ்ணரின் பிள்ளை. உன் தாயார் ருக்மணி. இருவரும் துவாரகையில் இருக்கிறார்கள் என்ற உண்மையை எடுத்துச் சொன்னாள்.உடனே தன்னை பெற்றோரிடமிருந்து பிரித்த சம்பாசுரன் மேல் ஆத்திரம் கொண்டு அவனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றான்.
வெற்றியுடன் திரும்பிய #பிரத்யும்னன் தன்னை வளர்த்த மாயாவதியை அழைத்துக் கொண்டு ஆகாயமார்க்கமாக துவாரகையை அடைந்தார். துவாரகையில் கிருஷ்ணரின் சாயலில் இருந்த பிரத்யும்னனைக் கண்டதும் யாதவர்கள் கிருஷ்ணர் என்றே எண்ணி மகிழ்ந்தனர்.
ருக்மணிக்கு அவனைக் கண்டதும் தாய்மை உணர்வு பொங்கியது .நாரதரும் கிருஷ்ணரை அழைத்துக் கொண்டு துவாரகை வந்து சேர்ந்தார் .நீண்ட நாட்களாக காணாமல் போன தன் பிள்ளை திரும்ப கிடைத்ததை எண்ணி ருக்மணி எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டாள்.
இதுவே திருமணத்திற்குப் பிறகு அவர்கள் வம்சவிருத்தி ஆகி பிரத்தியும்னன் பிறந்து வளர்ந்த வரை உள்ள கதை .