“காராம் பசு எங்கே?”—பெரியவா

“காராம் பசு எங்கே?”—பெரியவா
0Shares
“காராம் பசு எங்கே?”—பெரியவா
திருவிடைமருதூரில் ஸ்ரீ மடம் முகாம்.
தினமும் ஸ்ரீ சந்த்ரமௌளீஸ்வர பூஜைக்கு முன்னதாக கோபூஜை நடைபெறும்.
அதற்காக என்று ஒரு காராம்பசு மடத்தில் இருந்தது.
ஒரு நாள் கோபூஜைக்கு அந்தப் பசுமாடு வரவில்லை. வேறு ஏதோ ஒரு பசு மாடு வந்தது.
பூஜையெல்லாம் நடந்து முடிந்தது.
கார்வாரைக் கூப்பிட்டனுப்பினார்கள் பெரியவா.
வெங்கட்ராமய்யர் வந்து வந்தனம் செய்தார்.
“காராம் பசு எங்கே?”
“நேற்று சாயங்காலத்திலேருந்து காராம் பசுவைக் காணோம். தலைக் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிப் போயிருக்கிறது. நேற்றைக்குத் தேடிப் பார்த்தும் கிடைக்கல்லே.இன்னிக்கும் ஆட்கள் போயிருக்கிறார்கள்…”
பெரியவா அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வெளியே புறப்பட்டார்கள். ‘எங்கே போகிறார்கள்?’ என்று யாருக்கும் தெரியவில்லை. தெருத் தெருவாய் நடந்து போய் குடியானவத் தெருவுக்கு வந்துவிட்டார்கள் பெரியவா.
தெருவாசிகளுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஆங்காங்கே நடுத்தெருவில் விழுந்து நமஸ்காரம் செய்தார்கள்.
ஒரு வீட்டைத் தாண்டி பெரியவா தொண்டார்கள் சூழ, கடந்து சென்றபோது, அந்த வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்து, “அம்மா…..அம்மா” என்று ஒரு பசுமாடு அலறும் குரல் கேட்டது.
பெரியவா அங்கேயே நின்று கார்வாரை அழைத்து வரச் சொன்னார்கள். அவர் வந்ததும், ” உள்ளே போய், நமது மாட்டை ஓட்டிக்கொண்டு வா” என்றார்கள்.அவர் அவ்வாறே உள்ளே சென்று, மடத்துக் காராம் பசு அங்கே கட்டப்பட்டிருப்பதைப் பார்த்து, அதை ஓட்டிக்கொண்டு வந்து பெரியவா முன் நிறுத்தினார். மாட்டைப் பாசத்துடன் பெரியவா தடவிக் கொடுத்தார்கள்.
பெரியவாளிடம் அந்த வீட்டுக்காரன் வந்து வணங்கினான்.
” இது மடத்து மாடுன்னு தெரியாதுங்க, வயல்லே பயிரை மேஞ்சுக்கிட்டு இருந்தது. அதனால், புடிச்சு கட்டிப் போட்டேன், மன்னிக்கணும்” என்று கெஞ்சி பெரியவா காலில் விழுந்தான்.
பெரியவா அன்பு நிறைந்த சிரிப்புத் தோன்ற அவனிடம் சொன்னார்கள்;
“நீ ரொம்ப சிரமப்பட்டு நெல் சாகுபடி செய்திருக்கே. மடத்து மாடு மேய்ந்து உனக்கு நஷ்டத்தைக் கொடுத்துட்டது, அதனாலே தான் பசு மாட்டைக் கட்டிப் போட்டே. உன்பேரில் தவறு இல்லை. நாங்கள் தான் மாட்டைச் சரியாகப் பார்த்துக் கொள்ளல்லே. உன் வயலில் மேய்ந்திருக்கு. உனக்கு நஷ்ட ஈடு தரணும்…”
அந்தக் குடியானவன், அவன் சம்சாரம்,குழந்தை-குட்டிகள் எல்லோரும் பெரியவா காலில் விழுந்து வணங்கினார்கள்.
குடியானவன் சொன்னான்;
“சாமி, அப்படியெல்லாம் சொல்லப்படாது.வயல்லே மேஞ்சது மடத்துப் பசுமாடுன்னு தெரியல்லே… அதனாலே கட்டிப் போட்டேன்…மடத்து மாடு எங்க வயல்லே மேஞ்சதாலே விளைச்சல் ரொம்ப நல்லா இருக்கும்..அதுவே போதும், நஷ்டஈடு எல்லாம் வேண்டாம்…”
பெரியவா குடியானவனுடைய உயர்ந்த சிந்தனையைப் பாராட்டும் வகையில் ஆழமாகக் கண்களால் பார்த்துப் பிரசாதம் கொடுத்தார்கள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *