உள்ளம் உருகுதய்யா…ஆண்டவன் பிச்சி அம்மாள்

0Shares
உள்ளம் உருகுதய்யா…
உள்ளம் உருகுதய்யா – முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே – எனக்குள்
ஆசை பெருகுதப்பா
பாடிப் பரவசமாய் – உன்னையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி – முருகா
ஓடி வருவாயப்பா
பாசம் அகன்றதய்யா – பந்த
பாசம் அகன்றதய்யா – உந்தன்மேல்
நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே – எந்தன்
ஈனம் மறைந்ததப்பா
ஆறுத் திருமுகமும் – உன் அருளை
வாரி வழங்குதய்யா
வீரமிகுந்தோளும் கடம்பும்
வெற்றி முழக்குதப்பா
கண்கண்ட தெய்வமய்யா – நீ இந்தக்
கலியுக வரதனய்யா
பாவி என்றிகழாமல் – எனக்குன்
பதமலர் தருவாயப்பா
உள்ளம் உருகுதய்யா – முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே – எனக்குள்
ஆசை பெருகுதப்பா
**********************
“உள்ளம் உருகுதய்யா ..!”
-டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு ,
உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.
ஆனால் , இசைத்தட்டுக்காக இந்தப் பாடலை பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும் , அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட …. இதை எழுதியவர் யார் என்று டி.எம்.எஸ்.சுக்கே தெரியாது.
பலகாலம் முன் பழனிக்கு சென்று இருந்தார் டி.எம்..எஸ்.! வழக்கமாக தங்கும் லாட்ஜில் தங்கி இருந்தார். அங்கு வேலை செய்த பையன் ஒருவன் , அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.. அந்தப் பாடல்தான் “உள்ளம் உருகுதடா”
பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப் போனார் டி.எம்.எஸ். ! அதை விட டி.எம்.எஸ். ஆச்சரியப்பட்டுப் போன இன்னொரு விஷயம்… முருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் – ஒரு முஸ்லிம் சிறுவன்.
டி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார். “தம்பி..இங்கே வாப்பா..”
பாடலை எழுதியது யார் என்று விசாரித்தார் டி.எம்.எஸ்.
எதுவும் விவரம் சொல்லத் தெரியவில்லை அந்தப் பையனுக்கு.
“பரவாயில்லை.முழு பாடலையும் சொல்லு..” என்று ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்ல சொல்ல , அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ்.
பழனியிலிருந்து சென்னை வந்ததும் , அந்த “உள்ளம் உருகுதடா” பாடலை “அடா” வரும் இடங்களை மட்டும் “அய்யா” என்று மாற்றி , பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ்.
அதன் பின் , கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும்பொழுது , மேடையிலேயே இந்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்..!
எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விடாதா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு..!
ஆனால் … எந்த ஊரிலும் , யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை.
.
பல வருஷங்கள் கடந்த பின் .. தற்செயலாக சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்கிறார் டி.எம்.எஸ்.
கும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர் , குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும் … அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார் .
காரணம் .. அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல் :
“உள்ளம் உருகுதடா…”
உடலெல்லாம் பரவசத்தில் நடுங்க , எழுதியவர் யார் என்று பாடலின் அடியில் பார்க்கிறார் டி.எம்.எஸ்.
அந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பெயர் ..’‘ஆண்டவன் பிச்சி’’ !
யார் அந்த ‘‘ஆண்டவன் பிச்சி’’ ?
டி.எம்.எஸ்.சின் தேடல் தொடங்கியது… நாளுக்கு நாள் அது தீவிரமானது. அதற்கு நல்லதொரு பதிலும் சீக்கிரத்திலேயே கிடைத்தது.
அந்த ‘ஆண்டவன் பிச்சி’ – ஒரு பெண்.
பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி .
பள்ளிக்கு செல்லாதவள் .படிப்பறிவு இல்லாதவள். பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள்.
ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம் , வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர்.. முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர்.
இறப்பதற்கு முன் , கோயில் கோயிலாக போய் பாடி வந்து கொண்டிருந்தார்.
அப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது , அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு “பிச்சைக்காரி” என நினைத்து துரத்த … காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து , பிரசாதமும் கொடுத்து .. “இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ ” என்று ஆசீர்வதித்து அனுப்ப …அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்விகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’..
சிலர் ‘ஆண்டவன்பிச்சை’ என்றும் சொல்வதுண்டு.
.
அப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த ‘உள்ளம் உருகுதடா’ ..!
அது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது.
சரி … இநதப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது ?
டி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது..?
# இந்த மாதிரி சில கேள்விகளுக்குப் பதில் எந்தக் கல்வெட்டிலும் கிடைக்கப் போவதில்லை. காகிதங்களிலும் இருக்கப் போவதில்லை.
கம்பியூட்டரும் கூட பதில் தரப் போவதில்லை.
“பாசம் அகன்றதய்யா – பந்த
பாசம் அகன்றதய்யா
உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
எந்தன் ஈனம் மறைந்ததப்பா
உள்ளம் உருகுதய்யா !”
இவர்தான் அந்தப் பாடலை எழுதிய ஆண்டவன் பிச்சி அம்மாள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *