இராமன் யார்?
இராமன் யார்? மானுடனா, தேவர்களில் ஒருவனா, இறைவனா?
இவர்களில் யாரும் இல்லை என்பான் இராவணன்.
அளக்கமுடியாத பாற்கடல் போல் வரங்கள் பெற்றவன் இராவணன். ஆகையால், ஒரு மானிடனால் தன்னை இம்மியளவும் அசைக்க இயலாது என்று நம்பியிருந்தான். மானிடன் ஒருவனால் ஆபத்துக்கள் வரலாம் என்று அவனிடம் மற்றவர்கள் சொன்னபோதும் அதை எடுத்தெறிந்தவன், தான் வரங்கள் பெற்றபோதும் தேவர்களால் தனக்கு அழிவு வரக்கூடாது என்பதிலேயே குறிப்பாக இருந்தான்.
போரில் இராவணன் விடுத்த சூலத்தினை இராமன் தவிடுபொடியாக்கிய உடன், யாரிவன் இந்த இராமன் என்று ஐயுற்று இவ்வாறாக சொல்கிறான்:
‘சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?’ என்றான்.
(கம்பராமாயணம் – இராவணன் வதைப்படலம் 135.)
இராமன் சிவனும் அல்ல, திருமாலும் அல்ல, நான்முகனாம் பிரம்மாவும் அல்ல. நான் பெற்ற வரங்களையெல்லாம் அழிக்கின்றான். பெரும் தவம் செய்து பெற்ற வரங்களைப் பெற்றவனோ என்றால், அப்படியும் தெரியவில்லை. இராமன் இவர்களுக்கெல்லாம் மேலான பரம்பொருளாகவே இருக்க வேண்டும் என எண்ணுகிறான். இப்பாடலில் இராவணனின் சிறிதேனும் சத்வ குணம் வெளிப்படுகிறது. ஆனால் அடுத்த பாடலில், அவனது ரஜோ குணம் வெளிப்பட, எதிரில் இருப்பவன் எவனாக இருந்தால் என்ன, எதிர் நின்றே வெற்றியை முடிப்பேன் என்றான்.