இப்படியும் ஒரு தாய்…
யார், யாரையோ இந்தியத் தாய், பாரதத் தாய், இந்திய அன்னை, பாரத அன்னை, வீரத் தாய், புரட்சித் தாய் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் உண்மையான புரட்சித் தாய் யார் தெரியுமா?
ராமன் வனவாசம் போக வேண்டுமென்று தீர்ப்பாகிறது. அவனும் மரவுரி தரித்துக் கிளம்பத் தயாராகிறான். உடனே லட்சுமணன் தன் தாய் சுமத்திரையைப் பார்க்க விரைந்து செல்கிறான். அண்ணனுடன் தானும் காட்டிற்குப் போக அன்னையிடம் உத்தரவு கேட்கிறான்.
உடனே தாய் உள்ளம் களங்கியதா?, கண்ணீர் பெருக்கியதா? பாசத்தால் துடித்ததா? போகவேண்டாம் என்றெல்லாம் தடுத்ததா?
இல்லவே இல்லை ” மகனே! வனமே இனி உனக்கு அயோத்தி; தந்தையும் அரசனும் இனி இராமன் ஒருவன்தான்; சீதைதான் இனி உன் தாய். இனி நீ இங்கே க்ஷண நேரம் தாமதிப்பதும் குற்றம்” என்கிறாள். – எப்பேர்ப்பட்ட தாய்!
உடனே லட்சுமணன் தாயின் அனுமதி பெற்ற மகிழ்ச்சியோடு, பெருமிதத்தோடு கம்பீரமாக அண்ணனுடன் புறப்படுகிறான். அப்பொழுது சுமித்திரை திடீரென அவனை அழைக்கிறாள்.
“மகனே!” என்று அவள் அழைக்கவும், தாயின் உள்ளத்தில் ஏதேனும் சலனம் ஏற்பட்டுவிட்டதா, முடிவை மாற்றிக் கொண்டு விட்டாளா என்று தோன்றுகிறதா?. இல்லை. அப்படி இல்லை. அப்படி அவள் மாற்றிக் கொண்டாள் பின் எப்படி அவளால் புரட்சித் தாய் ஆக முடியும்?
அவள் சொல்கிறாள், ”இவனுடன் செல்லாதே!”
”என்ன, என்ன, இவனுடன் செல்லக் கூடாதா ஏன்?. முதலில் ’போ’ என்று அனுமதி தந்தவள் பின் ஏன் இப்படிச் சொல்கிறாள்” என்று சந்தேகம் வருகிறதா?
சற்று பொறுங்கள்.
அவள் சொல்கிறாள், “ இவனுடன் செல்லாதே! இவன் பின் செல்!”
பின்னவன்
அப்போதுதான், தன் தாயின் மனதில் உள்ளது லட்சுமணனுக்குப் புரிகிறது. லட்சுமணன் இராமனுடன் சமமாகப் போனால், அவனுக்குத் தானும் சமமானவன் என்ற எண்ணம் உண்டாகி விடுமாம்; அதாவது தானும் ஓர் அரசகுமாரன் என்பது நினைவிற்கு வந்து விடுமாம்; ஒருவேளை தன்னை இராமன் தம்பியென்றே நினைத்துக் கொள்ளவும் கூடுமாம் அவன். அப்படிப்பட்ட நினைவு வந்தால் வனத்திலே இராமனுக்குச் செய்ய வேண்டிய ஏவல்கள் செய்வதில் குறைகள் ஏற்பட்டு விடுமே! அது இழுக்கல்லவா?
அதனால் தான் சுமித்திரை,
” பின்னும் பகர்வாள் மகனேஇவன் பின்செல் தம்பி
என்னும் படியன்(று) அடியாரினில் ஏவல் செய்தி
மன்னும் நகர்க்கே இவன்வந்திடின் வாஅ தன்றேல்
முன்னம் முடியென்றனள்.”
என்கிறாள்.
மன்னவனுடன் பின்னவன்
அதாவது, “உன்னைப் பார்ப்பவர்களும் ’இவன் இராமன் தம்பி’ என்று தெரிந்து கொள்ளாமல் ’அவன் ஏவும் தொழிலைச் செய்யும் அடிமை’ என்று நினைக்கும்படி நடந்து கொள். இவ்விதமாகப் பணி செய்து, நகரத்துக்கு இராமன் மீண்டு வந்தால் நீயும் வா.” இல்லாவிடடால்…..
இல்லாவிடடால்… – ஒருவேளை ’இராமனுக்கு ஏதேனும் ஆபத்து நேருமாயின்’ என்பதைச் சொல்லவும் அஞ்சி – ’அதன்றேல் முன்னம் முடி’“ என்கிறாள்.
அதாவது “அப்படியில்லாமற் போனால், வேறு ஏதாவது அபாயகரமான சூழ்நிலைகள் வந்தால் நீ அவனுக்கு முன்னமே உயிரை முடித்துக் கொள்” என்று ஆசிர்வதிக்கிறாள்!
”அண்ணனைக் காக்க உன் உயிரைக் கொடு” என்று ஆசிர்வதிக்கும் இவளல்லவோ புரட்சித் தாய்! வீரத் தாய்! ஞானத் தாய்! பாரதத் தாய்!
இந்த அன்னையை அல்லவா நாம் பாரதத் தாயாக, இந்திய அன்னையாகப் போற்றி வணங்க வேண்டும்!!